திலகவதி ஐபிஎஸ்-ன் தங்கை மகன்.. விஜய் உடன் சேர்ந்து அரசியல் களத்தை அதிரவைத்த ஆதவ் அர்ஜுனா! யார் இவர்?

post-img

சென்னை: விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு திமுகவை உரசிப் பார்த்துள்ளது. ஆதவ் அர்ஜுனா பற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோபமாகப் பேசியுள்ளார். ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி விட்டிருக்கும் ஆதவ் அர்ஜுனா யார்?
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் விசிக சார்பில் 'வெல்லும் சனநாயகம்' என்ற பெயரில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில், விசிகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளம் வெளியிடப்பட்டது. இந்த இணையதளத்தை வடிவமைத்துக் கொடுத்தது ஆதவ் அர்ஜுனா தலைமையிலான Voice of Commons குழுவினர். மேலும், Voice of Commons நிறுவனர் ஆதவ் அர்ஜுனாவும், இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தளம் மூலமாக தன்னையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

அந்த மாநாட்டின் மேடையிலேயே ஆதவ் அர்ஜுனாவை மேடையேற்றி அவருக்கு பாராட்டுத் தெரிவித்தார் விசிக தலைவர் திருமாவளவன். அதற்கு முன்பாகவும் விசிகவின் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தது ஆதவ் அர்ஜுனாவின் Voice of Commons நிறுவனம். இதைத்தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டார் விசிக தலைவர் திருமாவளவன்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, தனது 5 வயதிலேயே தாயை இழந்தவர். இவரது தாயார் மாற்று சாதியைச் சேர்ந்த நபரை காதலித்த நிலையில், அவரது பெற்றோர் அவரை விவசாயி ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். பின்னர், சில ஆண்டுகளில் வறட்சி விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம், குடும்ப பிரச்சனை காரணமாக ஆதவ் அர்ஜுனாவின் தாயார் தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பிறகு தனது மாமா வீட்டில் வளர்ந்தார் ஆதவ் அர்ஜுனா. ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மா தான் தமிழ்நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி ஐபிஎஸ். டிஜிபி பதவி வரை எட்டியவர் திலகவதி. தனது பெரியம்மா திலகவதி ஐபிஎஸ்ஸை பார்த்து, அவரைப் போல சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வளர்ந்தவர் ஆதவ் அர்ஜுனா.

சிறு வயதில் இருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார் ஆதவ் அர்ஜுனா. சென்னை எம்.சி.சி கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேர்ந்து படித்தார். கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடிய ஆதவ் அர்ஜுன், மாவட்ட, மாநில அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடியுள்ளார்.
முன்னாள் கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுன், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் என கூடைப்பந்து விளையாட்டுத் துறை சார்ந்த பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திய கூடைப்பந்து சம்மேளன தேர்தலில் வெற்றி பெற்று இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ளார் ஆதவ் அர்ஜுனா.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் தான் இந்த ஆதவ் அர்ஜுனா. மார்ட்டினின் மகள் டெய்சியின் கணவர் ஆதவ் அர்ஜுன். லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றபோது, ஆதவ் அர்ஜுனாவின் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of Common) என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜுனா, கடந்த சில ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார். விசிக விருது வழங்கும் விழா, விசிக பூத் ஏஜெண்டுகள் கூட்டம் ஆகியவற்றை இவரது நிறுவனம் தான் ஏற்பாடு செய்து நடத்தியது.
இதைத்தொடர்ந்து தான் அவரை கட்சியில் சேர்த்து துணைப் பொதுச் செயலாளர் பதவியையும் வழங்கினார் திருமாவளவன். ஆதவ் அர்ஜுனாவுக்காக, லோக்சபா தேர்தலின்போது பொது தொகுதி ஒன்றை திமுக கூட்டணியில் விசிக கேட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தனி தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகள், சர்ச்சையை ஏற்படுத்தத் தொடங்கின. தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற முடியாது எனக் கூறியிருந்தார். அதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பதிலடி கொடுக்க, அவருக்கு மீண்டும் மற்றொரு பேட்டியில் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுக்க என வார்த்தைப் போர் தொடர்ந்தது.
ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளுக்கு விசிக மேல்மட்டத்திலேயே எதிர்ப்புகள் எழுந்தன. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாநாட்டில் பேசியதற்கு ஆதவ் அர்ஜுனா வரவேற்பு தெரிவித்திருந்தது இந்த மோதலை மேலும் சூடாக்கியது. அண்மையில் ஒரு விழாவில், "பிரச்சனை வரும் என்றுதான் நாங்கள் காத்திருக்கிறோம்" என்று கூறியது விசிக மூத்த நிர்வாகிகள் மட்டுமின்றி, திமுகவினரையும் கொதிப்படையச் செய்தது.
அம்பேத்கர் குறித்த புத்தக நிகழ்வு வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யையும் ஒன்றாக மேடையில் அமரவைத்து தனது நிறுவனம் ஒருங்கிணைத்த புத்தக வெளியீட்டு விழாவை நடத்த முயற்சித்தார். ஆனால், நேற்று நடந்த இந்த விழாவில் பங்கேற்பதை திருமாவளவன் தவிர்த்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து பிரித்து, வரும் 2026 சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா திட்டமிட்டிருப்பதாக பேச்சுகள் எழுந்திருக்கின்றன. விசிகவினரே, ஆதவ் அர்ஜுனாவின் நடவடிக்கைகளை ரசிக்கவில்லை.
இந்தச் சூழலில் தான் நேற்று நடந்த நிகழ்வில், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதை போல, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும். தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்து விட்டனர். தமிழகத்தில் இனி மன்னராட்சிக்கு ஒருபோதும் இடம் இல்லை" என்று பேசி இருக்கிறார்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு விசிக எம்.பி ரவிக்குமார், விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விசிக தலைவர் திருமாவளவன், "கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. அந்தக் கருத்தை நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மறுக்கிறது. ஆதவ் அர்ஜுனாவிடம் உயர்நிலைக் குழுவின் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

Related Post