தமிழ்நாடே நனையுதே.. இன்னைக்கெல்லாம் நல்ல ஆக்‌ஷன்தான்..

post-img

சென்னை: விடிய விடிய மழை கொட்டிய நிலையில், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே, பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.


நேற்று மாலை, திருச்சி, கும்பகோணம், நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, தேனி,சேலம், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியிருந்தார்.


திண்டுக்கல்: கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், உள்நாடு, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இன்று நல்ல ஆக்ஷனை பார்க்கலாம் என்றும், டெல்டாவிலும் சில மாவட்டங்களில் 100 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தார்.


அடுத்த ஒரு வாரத்துக்கு, சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்த நிலையில், வானிலை மையமும், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


கனமழை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


கடலூர் : இதேபோல, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் ஆக. 31 (நாளை) மற்றும் செப்.1-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, லேசானஅல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.


தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவானமழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை கோடம்பாக்கத்தில் 7 செ.மீ., வானகரம், அண்ணாநகர், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் தலா 6 செ.மீ., நுங்கம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் புழலில்தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


சூறாவளிக் காற்று: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல்பகுதிகளில் இன்று மணிக்கு அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்திலும், இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஆக. 31) அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இரு நாட்களும் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post