சென்னை: முதலீடு செய்யும் போது நம்மில் பலருக்கும் வரும் கேள்வி ஒன்றுதான்.. அதாவது மாதத்தின் எந்த நாளில் முதலீடு செய்தால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதே அந்த கேள்வி.. இதற்கான பதிலை ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார்.
பொதுவாக சிறுக சிறுக சேமிக்க வேண்டும் என்பதே நம் அனைவருக்கும் சொல்லித் தரப்படும் சிறு வயதில் இருந்தே விஷயம். ஆனால், சேமித்தால் மட்டும் போதாது.. அதைச் சரியான வழிகளில் முதலீடு செய்தால் மட்டுமே இந்தக் காலத்தில் பணத்தைச் சேமிக்க முடியும்.
அதுபோல சேமிக்க இப்போது பல்வேறு வழிகள் இருக்கிறது. குறிப்பாகத் தங்கம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் என்று நாம் பல்வேறு வழிகளில் சேமிக்கலாம். இவை அனைத்தும் நீண்ட கால நோக்கில் நல்ல லாபத்தைத் தரும்.
சிப் முதலீடு: மேலும், சிப் (SIP) முறையிலேயே இங்குப் பலரும் முதலீடு செய்கிறார்கள். இந்த Systematic Investment Plan- சிப் என்றால் ஏதோ புரியாத விஷயம் என்று நீங்கள் குழம்பிவிட வேண்டாம். மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதே இந்த சிப் முறையாகும். அது நீங்கள் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். உதாரணமாக நீங்கள் மாதாமாதம் 2000 ரூபாயைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அது சிப் தான். தங்கத்திற்குச் சீட்டுப் போட்டு மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை அதில் செலுத்தினாலும் சிப் என்றே அதைக் குறிப்பிடுவார்கள்.
இப்படி சிப் மூலம் முதலீடு செய்யும் பலரும் எழும் கேள்வி ஒன்றுதான். அதாவது மாதத்தின் எந்த நாள் முதலீடு செய்தால் அதிக லாபம் என்பது தான் அந்த கேள்வி . அதாவது மாதத்தின் எந்த நாள் முதலீடு செய்தால் குறைந்த விலையில் பங்குகளை வாங்க முடியும் என்பதே பலருக்குமான கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே இது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
எப்படி முதலீடு செய்ய வேண்டும்: மாதத்தில் எப்போது பங்குச்சந்தை குறைகிறது என்பதைப் பார்த்துப் பார்த்து முதலீடு சரி, சந்தையைப் பார்க்காமல் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் முதலீடு செய்தாலும் சரி நீண்ட கால நோக்கில் அது லாபத்தில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்துவது இல்லை என்று ஆனந்த் சீனிவாசன் தனது வீடியோவில் விளக்கமளித்துள்ளார். அதாவது குறிப்பிட்ட நாளில் முதலீடு செய்வது என்பது நீண்ட கால நோக்கில் லாபத்தில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பொதுவாக இந்த 5, 10% குறையும் என்பதை டிரோடிங் செய்யும் புரோக்கர்கள் தான் பார்ப்பார்கள். எனவே, இது குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. அது மட்டுமின்றி நீங்கள் எதாவது நிறுவனத்தில் வேலை செய்யும் நபராக இருந்தால் உங்களால் மார்க்கெட் எல்லாம் தினசரி பார்க்க முடியாது.
பெரிய மாற்றமில்லை: மேலும், பங்குச் சந்தையில் கடந்த 2, 3 ஆண்டுகளில் பெரியளவில் லாபம் கிடைக்கவில்லை. இதனால் 2 லட்ச ரூபாய் வரை வந்துவிட்டால்.. அதை எடுத்து நல்ல நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். கடன் பத்திரங்களின் மூலம் நமக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை வட்டி கிடைக்கும். அந்த வட்டியை எடுத்து மீண்டும் பிடித்த பங்குகளை வாங்கலாம்.
நன்றி வணக்கம்: அந்த மாதம் முழுக்க பார்த்து ஒரு குறிப்பிட்ட நாளில் தான் வாங்க வேண்டும் என்று இல்லை. சிறுக சிறுக சேர்த்தாலே 10 ஆண்டுகளில் நல்ல லாபம் வரும். இதையும் தாண்டி எப்போது மாதத்தில் எப்போது சந்தை நன்கு குறைகிறதோ அப்போது தான் முதலீடு செய்வேன் என்போருக்கு ஒரே ஒரு பதில்தான். இது மாதிரி கேட்போருக்கு ஒரு பதில்தான் நன்றி வணக்கம் கிளம்பிடுங்கள் என்பது தான் ஒரே பதிலாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
இது ஒரு சாதாரண செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.