ராணிப்பேட்டை: வேலூர் விஏஓ ஷர்மிளா சிறை சென்ற விவகாரம் அடங்குவதற்குள் அடுத்த பரபரப்பு ராணிப்பேட்டையில் நடந்துள்ளது.. சார் பதிவாளர் அலுவலகத்தில் கையும் களவுமாக பெண் அதிகாரி சிக்கியதில், தற்போது அது தொடர்பான நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
பதிவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டவைகளில் சமீப காலமாகவே லஞ்ச லாவண்யம் பெருக்கெடுத்து ஓடுகிறது.. அதிலும் பெண் அதிகாரிகள் சிக்கி சிறை செல்லும் நிகழ்வுகள் அதிகரித்து கொண்டே வருகிறது.
வேலூர்: 4 நாட்களுக்கு முன்புகூட ஒரு பெண் அதிகாரி சிக்கினார்.. வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தின் பட்டாவுக்காக, அதை அளக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார்..
ஆனால், அந்த இடத்தை அளந்து கொடுப்பதற்கு விஏஓ ஷர்மிளா, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பெண், இது குறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, காவல்துறையினரின் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்துடன் விஏஓவை, அந்த பெண் சந்திக்கச் சென்றார். அலுவலகத்தில் ஷர்மிளா இருக்கைக்கு அருகே சென்று, கையில் ரசாயனம் தடவி வைத்திருந்த லஞ்ச பணத்தை கொடுத்ததுமே, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஷர்மிளாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இப்போது விஏஓ ஷர்மிளா வேலூர் ஜெயிலில் உள்ளார்.
ராணிப்பேட்டை: இந்த சலசலப்பு அடுத்த பரபரப்பு ராணிப்பேட்டையில் கிளம்பியிருக்கிறது.. காவேரிப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில், ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினார்கள்..
காரணம், இந்த காவேரிப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் இங்குள்ளவர்கள் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.. இது குறித்து மாவட்ட ஆய்வுக் குழு துணை அலுவலர் முருகனுக்கும் ரகசிய தகவல் சென்றது.. இதையடுத்தே, முருகன் தலைமையில் திடீரென இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது சார் பதிவாளர் அலுவலகத்தின் மெயின் கேட்டை பூட்டிக்கொண்டு போலீசார் உள்ளே சென்றார்கள்..
மேஜை, நாற்காலி: அதன் பிறகு, பதிவறை மற்றும் கம்ப்யூட்டர் அறையை சோதனை செய்ததில் மேஜை, நாற்காலி, பீரோ, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கணக்கில் வராத 23 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, அலுவலகத்தில் இருந்த இடைத்தரகர்களிடம் இருந்து 22 ஆயிரத்து 500 என மொத்தம் 46 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தார்கள்..
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், காவேரிப்பாக்கம் சார் பதிவாளராக பணியாற்றி வந்த மேனகா, ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பதிவு இல்லாத பணிக்கு தற்போது டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளாராம்..
டிரான்ஸ்பர்: மேனகாவை இடமாற்றம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.. அதேபோல் காவேரிப்பாக்கம் சார் பதிவாளர் பொறுப்பிற்கு, உதவியாளராக உள்ள வெங்கடேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.