சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் எடப்பாடி முன்னிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் சாதி வாரி கணக்கெடுப்பு, கல்வி மாநிலப் பட்டியல் உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு நிர்வாகிகள் சுமார் 3,500 பேர் பங்கேற்றுள்ளனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு உரை ஆற்றினார்.
பொதுக்குழுவிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்ஜிஆர் வேடமணிந்தபடியும், ஆடியும் பாடியும் உற்சாகத்தோடு கூட்டத்துக்கு நிர்வாகிகள் வந்திருந்தனர். இதேபோல் வானகரம் பகுதி எங்கும் பேனர்கள், கட்சி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழல், மற்றும் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு பிறகு நடைபெறும் முதல் அதிமுக பொதுக்குழு கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் எடப்பாடி என்ன பேச போகிறார் என்பது கவனம் பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டத்தையும் செயற்குழு கூட்டத்தை இருமுறையும் நடத்த வேண்டும் என்ற விதி உள்ளது.
இதன்படி, பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. காலை 10.35 மணிக்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன் தலைமையில் பொதுக்குழு தொடங்கியது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
1. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் 'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மனைவியும், கலைத் துறையைச் சேர்ந்தவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான போற்றுதலுக்குரிய அம்மையார் திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழாவை பெருமை பொங்க நடத்திக் காட்டிய, கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு பாராட்டும், நன்றியும்!
2. தமிழ் நாட்டில் மிகப் பெரிய போழிவை 'ஃபெஞ்சல்' புயல் ஏற்படுத்திய நிலையில் அதை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை எதையும் செய்யாமல், பேரிடர் காலங்களில் மக்களுக்கான குறைந்தபட்சம் உணவு, உறைவிடம், குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட ஒழுங்காக, முறையாக நிறைவேற்றாத திரு. ஸ்டாலினின் | தலைமையிலான விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
3. விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கு; போதைப் பொருட்கள் நடமாட்டம்; ஏழை, எளிய, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு, முத்திரைத் தாள் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பீடு உயர்வு என்று தமிழ் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வரும் நிர்வாகத் திறமையற்ற திரு. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
4. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும்; அரசு ஊழியர்கள் கோரி வரும் பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் ஊதிய முரண்பாடு, பணி நிரந்தரம் ஆகியவற்றை நிறைவேற்றாமலும்; விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள் நிறைவேற்றாமலும் ஆகியோரின் தொடர்ந்து விடியா திமுக அரசுக்கு கண்டனம் ! கோரிக்கைகளை வஞ்சித்து வரும்
5. டங்ஸ்டன் சுரங்கம் தமிழகத்தில் மேலூருக்கு அருகில் கொண்டுவர மத்திய அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியபோதே, 10 மாதகாலம் அவகாசம் இருந்த நிலையிலும் அவற்றைத் தடுக்கத் தவறிய திரு. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசுக்கும்; நாடாளுமன்றத்தில் இச்சட்டம் கொண்டுவரும்போதும், அதற்குப் பிறகும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் போதிய அழுத்தம் கொடுத்து தடுக்கத் தவறிவிட்ட திமுக தலைவர் திரு. ஸ்டாலினுக்கும் கடும் கண்டனம்!
6. தமிழகத்தில் மதுரை மாவட்டம், மேலூர் அருகில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை மத்திய அரசு கைவிடுமாறு வலியுறுத்தல்!
i) உலகப் பொதுமறையாகவும், இந்தியாவுக்கு வழிகாட்டியாகவும், வாழ்வியல் தமிழகத்திற்கு காலம் வழங்கிய கொடையாகவும் திகழ்கின்ற திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசை வலியுறுத்துதல்!
ii) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வலியுறுத்தல்!
il) இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு - மத்திய அரசால் இயற்றப்படும் சட்டங்களின் பெயர்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதைக் கைவிட்டு, ஆங்கிலத்திலேயே தொடர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!
7. மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி அவைகளை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்காமல்; திட்டமிடல் எதுவுமின்றி விளம்பரத்திற்காக 'ஃபார்முலா 4' கார் பந்தயம் நடத்துதல்; வரைமுறையின்றி சிலைகள் வைத்தல்; பூங்காக்கள் அமைத்தல்; பேனா நினைவுச் சின்னம்; பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு கூட்ட அரங்கம் கட்டுதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து, ஆடம்பர செலவு செய்து, மக்கள் நலன்களை பின்னுக்குத் தள்ளி அரசு நிதியை வீணடிக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
8. கழக ஆட்சியின்போது குடிமராமத்துத் திட்டம், தடுப்பணைகள் திட்டம், அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேமிக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதை, விடியா திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தத் தவறியதற்கு கண்டனம்!
9. தமிழ் நாடு தண்ணீர் பற்றாக்குறை கொண்ட மாநிலம். அதனால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. கழக ஆட்சியில் தொலை நோக்குப் பார்வையோடு கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு, பாண்டியாறு-புன்னம்புழா ஆகிய திட்டங்களையும், தொடர் நடவடிக்கை எடுத்து செயல்படுத்தத் தவறிய விடியா திமுக அரசுக்குக் கண்டனம் !
10. நீட் தேர்வு ரத்து குறித்து கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
11. வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதை சரிசெய்திடவும்; தேர்தல் நியாயமாக நடத்தப்படவும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல்!
12. கல்வி. பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையையும், சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில், சாதிவாரி கணக்கெடுப்பினை எடுக்க விடியா திமுக அரசை வலியுறுத்தல்!
13i) சிறுபான்மையினர் நலன் காக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் நடைமுறைப்படுத்திய திட்டங்களை முடக்கிவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தி, சிறுபான்மையினர் நலன் காக்கப்பட வேண்டும் என்று விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் !
ii) 2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துவிட்டு, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாத, விடியா திமுக அரசைக் கண்டிக்கின்றோம்!
ii) பட்டியலின மக்களின் உரிமைகளைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறிய விடியா திமுக அரசுக்கு கண்டனம்!
14.மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையில், மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த கல்வியை, நாட்டில் அவசர நிலை அமலில் இருந்த காலகட்டத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை, மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தல் !
15. தமிழ் நாட்டிற்கான நிதிப் பகிர்வினை பாரபட்சமில்லாமல் வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தல்!
16. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' மாண்புமிகு எடப்பாடி K. பழனிசாமி அவர்களை 2026-ல் மீண்டும் தமிழ் நாடு முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம்! ஆகிய 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.