சிக்கலில் இரட்டை இலை? எடப்பாடிக்கு மீண்டும் திக், திக்! தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு

post-img
டெல்லி: எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய விவகாரத்தில் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறது. ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே தான் இரட்டை இலை சின்னம், கட்சி கொடியை கைப்பற்றுவது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்திலும் உரிமை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இருப்பினும் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கட்சியின் கொடி, சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தான் பயன்படுத்தி வருகிறது. இதற்கிடையே தான் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கியதில் நீதிமன்ற உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. தான் வழங்கிய மனுக்களை பரிசீலனை செய்யாமலேயே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது என்று கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு என்பது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தொடரப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் அஜராகி இருந்தார். அவர் கூறுகையில், ‛‛தங்கள் தரப்பை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. மேலும் கட்சிக்குதொடர்பில்லாத புகழேந்தி சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மனுவை ஏற்க கூடாது'' என்று ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் இதனை உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் ஏற்க மறுத்துவிட்டார். அதேபோல் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், ‛‛இந்த விவகாரம் தொடர்பாக புகழேந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். வரும் 24ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம்'' என்று கூறப்பட்டது. அதற்கு புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திக், ‛‛நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே விசாரணைக்கு அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுவை விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு காலக்கெடுவை வழங்க வேண்டும்'' என்று வாதிடப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ், ‛‛இரட்டை இலை சின்னம் தொடர்பான மனுக்களை விசாரித்து விரைந்து தீர்வு காண வேண்டும்'' என்று உத்தரவிட்டார். அதேவேளையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எந்த காலக்கெடுவையும் விதிக்க முடியாது'' எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Related Post