சென்னை: நமது நாட்டில் லோக்சபா மற்றும் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே முன்னாள் தேர்தல் வியூக வல்லுநரும் ஜான் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேர்தல் வியூ வகுப்பார்களில் முக்கியமானவர்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2014 தேர்தலில் இவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
ஜான் சுராஜ்: அதன் பிறகு ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என்று பல்வேறு கட்சிகளுக்காகவும் இவர் தேர்தல்களில் பணியாற்றியிருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் கூட இவர் திமுகவுக்காக பணியாற்றி இருந்தார். அதன் பிறகு தேர்தல் வியூக வகுக்கும் வேலைக்கு குட்பை சொன்ன பிரசாந்த் கிஷோர், தனது சொந்த மாநிலமான பீகாரில் ஜான் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கினார்.
இதற்கிடையே ஒரு நாடு ஒரே தேர்தல் சட்டம் தொடர்பாக முன்னாள் தேர்தல் வியூக வல்லுநரும் ஜான் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டிற்கு நன்மையை, நாட்டிற்கு நன்மை தான் தரும்.. இருப்பினும், அதை நல்ல நோக்கத்திற்காக அவர்கள் கொண்டு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நோக்கம் முக்கியம்" இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எந்த நோக்கத்திற்காக அதைக் கொண்டு வருகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். நமது நாட்டில் பல சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒடுக்கக் கொண்டு வருகிறோம் என்று கொண்டு வந்தார்கள். ஆனால், அவை அனைத்துமே ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே எதிராக இருக்கிறது.
நான் பல தேர்தல்களைச் சந்தித்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் கணிசமான பகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. இப்படியே ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது. அதேநேரம் இது ஏதோ முற்றிலும் புதிய ஒன்றும் இல்லை.. 1960கள் வரை, லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.
கவனிக்க வேண்டும்: மீண்டும் அதுபோல நடக்கத் தொடங்கினால் அது நாட்டிற்கு நல்லது தான். அதேநேரம் நாம் மெல்ல அதை நோக்கிச் செல்ல வேண்டும். எடுத்தும் கவிழ்த்தோம் என ஒரேயடியாக மாறக் கூடாது. இவை அனைத்தையும் விட இந்த சட்டத்தை எந்த நோக்கத்திற்காகக் கொண்டு வருகிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்: நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தலும் மாநிலச் சட்டசபைத் தேர்தல்களும் தனித்தனியாகவே நடக்கிறது. இதனால் நாட்டில் எல்லா காலங்களிலும் எப்போதாவது தேர்தல் நடந்து கொண்டே இருப்பது போன்ற சூழலே நிலவுகிறது. இதனால் வளர்ச்சி பணிகளைச் சரியாகச் செய்ய முடிவதில்லை என்ற பேச்சுகள் உள்ளன.
இதன் காரணமாகவே மத்திய மாநில அரசுகளைத் தேர்வு செய்யும் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தையும் கொண்டு வர மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளனர். இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.