சென்னை: தமிழகத்தில் பைக் டாக்சி சேவை அதிகரித்து வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, பைக் டாக்சிக்கு தடை விதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் வாதங்களை நியாயப்படுத்தும் விதமாக, ஆணும் பெண்ணும் ஒன்றாக பைக்கில் பயணிப்பதை கண்டித்து, இது கலாச்சாரத்திற்கு எதிரானது என்கின்றனர். குறிப்பாக, கணவன் தன் மனைவியை பைக் டாக்சியில் அனுப்பி வைப்பதை கேள்வி எழுப்பி, இதுபோன்ற செயல்கள் கற்புக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் கேடு என்று ஆட்டோ டிரைவர்கள் சிலர் கொடுத்த பேட்டி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆணும் பெண்ணும் எந்த வாகனத்தில் வேண்டுமானாலும் பயணிக்க சுதந்திரம் உடையவர்கள். கணவன் தன் மனைவியை பைக் டாக்சியில் அனுப்பி வைப்பது என்பது ஒரு தனிப்பட்ட விஷயம். இதில் மூன்றாம் நபர்கள் தலையிட முடியாது. ஆனால், நடு வீட்டுக்குள் வந்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் நாட்டாமை செய்துள்ளதாகவே இந்த கருத்து பார்க்கப்படுகிறது..
ஆணும் பெண்ணும் ஒன்றாக பைக்கில் பயணித்தால் கற்பு போய்விடும் என்ற வாதம் மிகவும் பிற்போக்கானது. ஒருவரின் கற்பு, அதாவது வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், ஒழுக்கம் என்பது அவர்களின் நடத்தை மற்றும் மதிப்புகளைப் பொறுத்தது. இது எந்த வகையிலும் பயண முறையை சார்ந்தது அல்ல. ஆணும் பெண்ணும் ஒன்றாக பயணிப்பதை கொச்சைப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான பாகுபாட்டின் வெளிப்பாடு. பெண்கள் எங்கு, எப்படி, யாருடன் பயணிப்பது என்பதை தீர்மானிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு.
பைக் டாக்சி சேவை கட்டணம் குறைவாக இருப்பதால், பலர் இதை விரும்பி பயன்படுத்துகின்றனர். இது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேர்வு. ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் கட்டணத்தை ஒருபக்கம் அதிகரித்துவிட்டு, வாடிக்கையாளர்களை தங்கள் வண்டியில் வருமாறு கட்டாயப்படுத்த முடியாது.
ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுவது நியாயமானதுதான். ஆனால், தங்கள் வாதங்களை நியாயப்படுத்தும் விதமாக, பெண்களின் சுதந்திரம் மற்றும் கற்பு போன்ற விஷயங்களை இழுத்து வருவது தவறு. இதுபோன்ற பிற்போக்கு வாதங்கள் சமூகத்தில் பரவக்கூடாது.
ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இந்த பிரச்சனையை தீர்க்க, மற்றொரு தொழிலைப் பாதித்து, ஒரு குறிப்பிட்ட பயண முறையை முழுமையாக தடை செய்வது சரியான தீர்வாக இருக்காது. பக்கத்து மாநிலத்திலுள்ள பெங்களூரில் பைக் டாக்சி உள்ளது. ஆனால் தமிழகத்தில் அதை தடை செய்ய அரசு முனைவதாக வெளியாகும் தகவல்கள் சரியானதாக தெரியவில்லை. ஏனெனில் பைக் டாக்சி ஓட்டுவோர் சமூகத்தில் பின்தங்கிய மக்கள்தான். வருமானம் இல்லாததால் முதுகு வலி வந்தாலும் பரவாயில்லை என்று பைக் ஓட்டி சம்பாதிப்பவர்கள். அவர்கள் வயிற்றில் எந்த அரசாக இருந்தாலும் அடிக்க கூடாது.
பைக் டாக்சி சேவையை ஒழுங்குபடுத்தவும், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் சுதந்திரம் மற்றும் சமத்துவம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி, மக்கள் பைக் மற்றும் ஆட்டோவை நம்பியிருக்க வேண்டிய அவசியத்தை குறைக்க வேண்டும்.