மும்பை: மகாராஷ்டிராவின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார். புதிய அரசின் பதவியேற்பு விழா மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது. துணை முதல்வராக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் பதவியேற்றனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி, அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் கூட்டணி கட்சிகளிடையே முதல்வர், துணை முதல்வர் பதவிகள் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூட்டணியில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றதால் முதல்வர் பதவியை ஏற்க பாஜக விரும்பியது. அதேநேரம், முதல்வர் பதவியை தங்களுக்கு தராவிட்டால், உள்துறை, நிதித்துறை மற்றும் சபாநாயகர் பதவியை தங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று ஷிண்டேவின் சிவசேனா வலியுறுத்தியது.
இந்த சூழலில் நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். மகாராஷ்டிர முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்க பாஜக மத்திய குழு ஒப்புதலை அளித்தது. இதைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி, தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகைக்கு நேற்று மாலை சென்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்.
அப்போது தேவேந்திர பட்னாவிஸ் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதத்தை அளித்தார். இதனையடுத்து, ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கெனவே இரண்டு முறை முதல்வராக இருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். புதிய அரசின் பதவியேற்பு விழா மும்பை ஆசாத் மைதானத்தில் இன்று பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage