பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ரூ7 கோடி மோசடி செய்ததாக இந்துத்துவா பிரசாரகர் சைத்ரா குந்தாபூர் உள்ளிட்ட 4 பேரை கர்நாடகா போலீஸ் கைது செய்துள்ளது.
கர்நாடகாவில் உடுப்பி உள்ளிட்ட பகுதியில் தீவிரமான வகையில் இந்துத்துவா கருத்துகளை பேசி வருபவர் சைத்ரா குந்தாபூர். பொதுக்கூட்டங்களில் சைத்ரா குந்தாபூர் மேடை ஏறினாலே சர்ச்சை பேச்சுகள்தான்.. சினிமாவில் வரும் கதாபாத்திரமான சைதை சரோஜா ரேஞ்சுக்கு பேசுவதுதான் இவரது பாணி. இதனாலேயே பல வழக்குகள் சைத்ரா மீது பாய்ந்துள்ளன.
இப்படியான பிரபல்யத்தை வைத்து பண அறுவடை பணிகளும் படுதீவிரமாக இருந்திருக்கிறார் சைத்ரா. அதுவும் எனக்கு பாஜகவில் அப்படி செல்வாக்கு இருக்கு; டெல்லியில் செம்ம செல்வாக்கு இருக்கு.. என் கூடவே இருக்கிறாரே.. அவருதான் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் என்றெல்லாம் கதை விட்டு கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது செம்மையாக கல்லா கட்டி இருக்கிறார் சைத்ரா.
சைத்ராவிடம் சிக்கி ரூ7 கோடி பணத்தை பறிகொடுத்த பெங்களூர் தொழிலதிபர் கோவிந்த்பாபு பூஜாரி வேறுவழியே இல்லாமல் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையி, பைந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட வைக்கிறேன் என தவணை முறைகளில் ரூ7 கோடியை சைத்ரா ஆட்டைய போட்டு உறுதியானது.
பிறகு என்ன, சைத்ராவை தூக்கிய போலீஸ் அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் சைத்ராவின் கூட்டாளிகள் 4 பேரும் சிக்கிவிட்டனர். மேலும் 4 பேரை கர்நாடகா போலீஸ் வலை வீசி தேடி வருகிறது. சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் ஆள் மாறாட்டம் செய்து இத்தகைய பண மோசடியில் சைத்ரா ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சைத்ராவிடம் பணம் கொடுத்து ஏமாந்தது ஒரு தொழிலதிபர் மட்டும்தா? இல்லை பெருங்கூட்டமே வெயிட்டிங்கா என்பது அடுத்த சில நாட்களில் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்கின்றன கர்நாடகா தகவல்கள்.