சென்னை: தமிழக பத்திரப்பதிவு துறையில், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், பல்வேறு அதிரடிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இப்போதும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள் அனைத்துமே, அந்தந்த பகுதியிலுள்ள சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இப்படி பதிவு செய்யப்படும் பத்திரங்களை ஓரிரு நாட்களுக்குள்ளேயே உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
பதிவுத்துறை: பணி முடித்து திருப்பி தரப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கையை, பதிவாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், கட்டிட கள ஆய்வு பணிகளுக்காக, பத்திரங்களை தாமதப்படுத்தக் கூடாது என்றும் பதிவுத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. எனினும், பெரும்பாலான சார் பதிவாளர்கள், பதிவான பத்திரத்தை தருவதற்கு தாமதம் செய்வதாக தொடர் புகார்கள் எழுந்தன.
இதையறிந்த பதிவுத்துறை, கட்டிட கள பணி நிலவரம் தொடர்பாக, தினசரி ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்ததுடன், கோப்புகளை, கட்டிட கள ஆய்வு விபரங்களை, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள், 4 மாதங்களுக்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும். டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்கள் இதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில்கூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சார் பதிவாளர்கள்: இப்படிப்பட்ட சூழலில், சார் - பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு நடப்பதை உறுதி செய்ய, சார் - பதிவாளர்களுக்கு பதிவுத்துறை மேலும் சில கட்டுப்பாடுகளை தற்போது விதித்திருக்கிறது. காரணம், பத்திரங்களை பதிவு செய்ய, சொத்து விபரங்களை, ஆன்லைன் முறையில் உள்ளீடு செய்ய வேண்டும். தகவல் சரிபார்க்கப்பட்ட பிறகு பத்திரப்பதிவுக்கான நேரம் ஒதுக்கப்படும். வெப்சைட் மூலமாகவும் அப்பாயிண்ட்மென்ட் தந்து, அதற்கான டோக்கன்களும் வழங்கப்படும்.
அந்தவகையில், தினமும் காலை, 10 மணி முதல் மாலை 3 மணி வரை பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், இந்த நேரத்தை முறையாக கடைப்பிடிப்பதில்லையாம்.. காலையில் ஒரு மணி நேரம் கழித்துதான், பணிகளையே துவக்குகிறார்களாம். இதனால், டோக்கன் வரிசைபடி பத்திரப்பதிவு முடியாமல், மக்கள் காத்திருக்க வேண்டியதாகிவிடுகிறது.
அறிவுறுத்தல்: இத்தனைக்கும், தினமும் காலையில், 10 மணிக்கு பத்திரப்பதிவை துவங்க வேண்டும் என்று அனைத்து சார் -- பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தும்கூட, காலை 10.30 மணிக்குள் வருகை பதிவேடு விபரங்களை, வாட்ஸாப் வாயிலாக, மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தும்கூட, பத்திரப்பதிவை துவங்காமல் காலதாமதம் செய்வது தெரிய வந்துள்ளது.
அதனால்தான், ஒரு புதிய அதிரடியை பதிவுத்துறை பிறப்பித்துள்ளதாம்.. இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, தினமும் காலையில், பத்திரப் பதிவுக்கான இணையதளத்தில், "லாக் இன்" செய்து, அதன் கணினி திரை விபரத்தை போட்டோ எடுத்து, வாட்ஸாப் மூலம் மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.. இந்த நடைமுறை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படும். தவறும் சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
நம்பிக்கை: பதிவுத்துறை மேற்கொண்டு வரும் இதுபோன்ற அதிரடியால், பத்திரங்களை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படாது, குறித்த நேரத்தில் பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது.