கோவை: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பார்மூலா இருப்பது போல, ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஃபார்முலாதான் திராவிட மாடல். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்று தமிழத துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கோவைக்கு வந்தடைந்தார். கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மைத்தை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 31 கோடி மதிப்பில் 29 அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மேம்பாட்டு மையங்கள் திறந்து வைக்கப்படுகின்றது. 6 பாலிடெக்னிக்குகளில் ஸ்மார்ட் டெக்னாலஜி சென்டர்களையும் இன்று துவங்கி வைக்கின்றோம்.
அந்த 29 மையங்களும் உலக தரத்தில் அமைய வேண்டும் என்பதற்காக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 30 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. கோவை மாணவர்களை சந்திக்கும் போது மனதுக்கு இனிதாக இருக்கின்றது. கோவை சேர்ந்த மாணவர்கள் படித்து முடித்து நாலு பேருக்கு வேலை கொடுக்க நினைப்பவர்கள்.
திராவிட மாடல் அரசு முதல் பட்டதாரி மாணவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும், தொழில் முனைவர் ஆக வேண்டும் என்று திட்டங்களை வகுத்து வருகின்றனர். தலைமைச் செயலாளர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் நடந்த நான் முதல்வன் திட்டத்துக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.
மாணவர்களுக்கு அனைத்து துறையில் முன்னேறும் வகையில் திட்டம் வகுக்கப்டுகிறது. நான் முதல்வன் திட்டத்தில் வெளிநாடு சென்று வருகின்றனர். அண்மையில் லண்டன் சென்று வந்தனர். நீலகிரியைச் சேர்ந்த தேயிலைத் தொழிலார் மகள் அமிர்தா லண்டன் சென்று வந்தார். அவருடைய அனுபவத்தை என்னிடம் பகிர்ந்தார். அதை இன்னும் என்னால் மறக்க முடியாது. என்னை பார்த்து உங்கள். ஊரில் பலர் படிக்க ஆசைபடுகின்றனர் என மாணவி தெரிவித்தார்.
மாணவர்கள் தினமும் 1 மணி நேரம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முன் வர வேண்டும். அப்போது தான் போட்டி நிறைந்த இந்த உலகில் உங்களால் பயணிக்க முடியும். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பார்மூலா இருப்பது போல, ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஃபார்முலாதான் திராவிட மாடல்.
தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கியது திமுக. நான் முதல்வன் திட்டத்தை இந்தியாவே பாராட்டுகின்றது. டெல்லியில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். இதுவரை 30 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. கார்ப்பரேட் உலகிற்கு தேவையான அனைத்து திறன்களும் இங்கு சொல்லிக் கொடுக்கப்படுகின்றது.
திறன் மையத்தில் தேர்வானவர்கள் தினம் ஒரு புது திறனை வளர்த்து கொள்ள முயற்சிக்க வேண்டும். திறன் பயிற்சி மையத்தை மாணவர்கள் யார் வேண்டுமானாலும் அணுகலாம். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்றார்.