எல்லாத்தையும் ’மேல’ இருக்கவங்க பாத்துப்பாங்க.. பாஜக உதவியை நாடும் பன்னீர்செல்வம்! எடப்பாடிக்கு செக்!

post-img
சென்னை: சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து வெளியேற்றியது, அதிமுகவின் பொது செயலாளர் ஆனது என எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான நிகழ்வுகள் அதிமுகவில் அரங்கேறியிருக்கிறது. இந்நிலையில் கட்சியின் அடையாளமான இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் அவரை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக பாஜக உதவியை நாட உள்ளதாகவும், இதற்காக அவர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கிறார். இந்த நிலையில் கட்சி சின்னம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் ஓபிஎஸ், சசிகலா தரப்பால் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும் கட்சியினரின் விருப்பப்படி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. அதே நேரத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அது நீதிமன்றம் வரை வந்திருக்கிறது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, சூர்ய மூர்த்தியின் மனு குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர். இதேபோல அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது, அதிமுகவின் பெயர் மற்றும் கட்சி கொடியை பயன்படுத்துவது குறித்து விரைவாக பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என பெங்களூர் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் டிசம்பர் கடைசி வாரத்தில் இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அணிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இதற்காக அவர்கள் டெல்லி செல்ல உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக எடப்பாடி பழனிச்சாமி எந்தவித சிக்கலும் இன்றி கட்சியில் பயணித்த நிலையில் தற்போது இரட்டை இலை சின்னம் விவகாரம் அவருக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி தரப்பில் இருக்கும் முன்னால் அமைச்சர்கள், நிர்வாகிகளை இழுப்பது மற்றும் பிற உதவிகளுக்காக பாஜக கூட்டணியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சி தலைமையின் உதவியை நாடி உள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் விரைவில் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே டெல்லியில் சில நாட்கள் தங்கி இருந்த ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் மூத்த நிர்வாகிகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Related Post