கோவை: கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாளையொட்டி கோவையில் வரும் 23ஆம் தேதி கணித அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான அனுமதி இலவசம். விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்துக் கொண்டு தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தலாம்.
கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்களின் 137 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அரசின் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறையின் அறிவியல் பரப்புகை திட்டத்தின் கீழ் செயல்படும் கோயமுத்தூர் கணிதவாணி கணித அறிவியல் கழகமானது கணித அறிவியல் கண்காட்சியை நடத்துகிறது.
இந்த கண்காட்சியானது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கோவை தொழில் நுட்ப கல்லூரி கணிதவியல் துறை ஆகிய அமைப்புகளோடு இணைந்து வருகின்ற 23/12/24 திங்கட்கிழமை அன்று கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள கோவை தொழில்நுட்ப கல்லூரியில் நடத்த உள்ளது.
இதில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் ,அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்களது கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான கண்டுபிடிப்புகள் மற்றும் சோதனைகளை காட்சிப்படுத்தலாம் . சிறந்த பங்களிப்புகள் கவுரவிக்கப்படும்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதில் கலந்துகொண்டு பங்கேற்கவும் பார்வையிடவும் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் முன்பதிவு அவசியம். விருப்பமுள்ள ஆர்வலர்கள் 98941 63604 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் .
இந்த தகவலை முனைவர்.இரா.பிரபாகரன், உதவிப் பேராசிரியர், கணிதவியல் துறை, கோவை தொழில் நுட்பக்கல்லூரி - CIT
கோயமுத்தூர்-641014 என்பவர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ராமானுஜர் பிறந்தநாளையொட்டி இந்த கண்காட்சியானது தற்போது முதல்முறையாக கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தற்போது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு பொதுமக்கள் அதிக அளவில் கவனம் செலுத்துகின்றனர் . ஆனால் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு அடிப்படையாக இருக்கும் கணிதத்தினை மக்கள் கண்டுகொள்வதில்லை. ஆகவே கணிதம் பற்றி மாணவர்களுக்கும் பொதுமக்ககளுக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்தும் பொருட்டும் கணித அறிவியலில் ஆர்வமுள்ள நபர்களை கௌரவிக்கும் பொருட்டும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு உதவி பேராசிரியர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இருப்பதிலேயே எளிமையான பாடம் கணிதம்தான். இதில்தான் எளிதாக மதிப்பெண்களை எடுக்கலாம். அதே வேளையில் தவறுகளை எளிதாக காட்டி கொடுத்துவிடும் பாடமும் இதுதான். ஒரு சிறிய தவறால் அந்த கணக்கே தவறாகும் நிலை ஏற்படும். எனவே கணிதம் போடுவதற்கு வேகத்தை விட விவேகம் முக்கியமானது.
ராமானுஜன் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை என்ற பகுதியில் பிறந்தார். சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் கணிதத்தின் மிக அடிப்படையான உண்மைகளை கண்டறிந்தார். இவர் தனது 33 ஆவது வயதிலேயே மரணமடைந்துவிட்டார்.