ரூட்டை மாற்றும் புயல்.. சென்னையில் மழை எந்த அளவுக்கு இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்

post-img

சென்னை: மிக்ஜாம் புயல் சென்னை மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தான் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மழை எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த மாதத்தின் 2-வது வாரத்தில் இருந்தே சூடுபிடித்த பருவமழை தமிழகம் முழுவதும் தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில்தான், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றுழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 3-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று முதலில் கணிக்கப்பட்டு இருந்தது. மேலும், வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும்.
மிக்ஜாம் (Cyclone Michaung) என பெயரிடப்பட்ட இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்றும் தகவல் வெளியானது. இந்தப் புயல் தமிழகத்தை நோக்கி வரும்போது கனமழை முதல் மிக கனமழை வரும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது புயலாக உருவாகி வரும் 4ஆம் தேதி சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலையில் அறிவித்திருந்தது.
நெல்லூர் - மசூலிப்பட்டினம்: இந்த நிலையில், புயல் கரையை கடக்கும் நாள் தாமதம் ஆகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் பிற்பகலில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கடலில் உருவாகும் மிக்ஜாம் புயலானது டிசம்பர் 4ஆம் தேதி தெற்கு ஆந்திரா வட சென்னைக்கு அருகே நகர்ந்து வரக்கூடும் இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மெதுவாக நகர்ந்து டிசம்பர் 5ஆம் தேதியன்று காலையில் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை- மசூலிப்பட்டினம் இடையே முதலில் புயல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


டிசம்பர் 3 மற்றும் 4: புயல் கரையை கடக்கும் இடம் மாறினாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருந்தது. இந்த நிலையில், முன்பு சென்னை மசூதிப்பட்டினத்திற்கு இடையில் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது, ஆனால் இப்போது நெல்லூர் மசூதிப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது:-
மிக்ஜாம் புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்வதால் வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் வட தமிழகத்தில் கனமழை பெய்ய அதிகமான வாய்ப்பு இருக்கிறது. புயலின் மையப்பகுதியில் தான் அடர்ந்த மேகங்கள் இருக்கும். அப்படி அடர்ந்த மேகங்கள் இருப்பின் புயல் கரையை கடக்கும் போது அதி கனமழைக்கு கூட வாய்ப்பு இருக்கிறது.


நிவாஸ் புயல்: அதாவது குறைந்த நேரத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும். சிறிய மேகங்கள் இருந்தால் கூட 100 மி.மீ அளவு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இங்கு புயல் மேற்கு வடமேற்கு பகுதியில் கரையை கடப்பதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் பார்த்தோமானால் இதேபோல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மரக்கோணம் அருகே நிவாஸ் புயல் கரையை கடந்ததை பார்த்தோம்.


வலுவிழந்த பிறகு தான் இந்த புயல் கரையை கடந்தது. இதனால் கரையை கடந்தது முக்கியம் கிடையாது. மேகங்கள் எவ்வளவு இருக்கிறது என்பது தான் முக்கியம். அந்த புயலின் போது, சென்னைக்கு நல்ல மழை கிடைத்தது. பாண்டிச்சேரியில் மட்டும் 300 மிமீ மழை கிடைத்தது. தற்போது உருவாகியுள்ள புயல் காற்று அதிகமாக இருப்பது போல் தெரியவில்லை.


சென்னையில் மழை எப்படி: தற்போது வைத்து பார்க்கும் போது 70- 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கலாம். எனினும் இனி தான் அதன் வேகம் என்ன என்பது தெரியவரும். தென் ஆந்திராவில் மழை அதிகளவில் பெய்யும். டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் கண்டிப்பாக நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் போது மேகங்கள் அடந்த மேகங்களாக இருக்காது.


தற்போது சென்னையில் மழை பெய்யாமல் இருப்பதற்கு இது தான் காரணம். இன்று பகலில் சென்னையில் மழை பெய்யவில்லை. ஆனால் சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் இரவு நேரங்களில் தான் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. புயல் வரும் போது டிசம்பர் 2-ம் தேதி மதியத்திற்கு மேல் மழை பெய்ய ஆரம்பிக்கும். மேலும் புயல் நேரங்களில் நாள் முழுவதும் மழை பெய்யும். இரவு நேரங்களில் மட்டுமல்லாது நாள் முழுவதும் மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Post