தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கான தகுதிகளையும், எப்படி செயல்படுத்தப்படவுள்ளது என்பதையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்துவதற்கு நிர்வாக அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தத் திட்டத்தில் பயன்பெறும் பெண்கள், 21 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், குடும்ப அட்டையில் 21 வயது நிரம்பிய பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்டோரின் பெயர்கள் இருந்தால், வயதில் மூத்த பெண்ணே குடும்பத் தலைவியாக கருதப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ரேசன் கடை பணியாளர், வீடுகளுக்கே சென்று விண்ணப்பப் படிவத்தை வழங்க வேண்டும் எனவும், அதில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிப்பதற்காக ரேசன் கடைக்கு நேரில் வர வேண்டிய நாளை குறித்து கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பிக்கும் பெண்கள் நேரடியாக ரேசன் கடைக்கு செல்ல வேண்டும் எனவும், விண்ணப்பப்பதிவின் போது கடவுச்சொல் அனுப்பப்படும் என்பதால், தங்களது செல்போனையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆதார் பதிவு கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை அளிக்கும் போது, ஆதார், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின்சார கட்டண ரசீது ஆகியவற்றை அசலாக எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், இவற்றின் நகல்களை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
முகாம்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவோ, நகல் எடுக்கவோ கட்டணம் வசூலித்தால் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பப்பதிவு முகாம்களை காலை 9.30 மணி முதல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடத்த வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பதிவு செய்ய 10 முதல் 12 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், 2 அல்லது 3 கட்டங்களாக விண்ணப்பங்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் பதிவு செய்ததை உறுதிபடுத்தும் தகவல் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும், இதற்கான இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நிராகரிப்பை எதிர்த்து விண்ணப்பதாரர் மேல் முறையீடு செய்ய விரும்பினால் 30 நாட்களுக்குள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதாவது, ஒரு குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவியின் வருமானத்தை சேர்த்து மாதம் 20 ஆயிரத்து 833 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த பயன்பாட்டுக்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மக்களின் சந்தேகங்களைப் போக்க மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திறக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.