கோடிக்கணக்கான ஆக்டிவ் யூசர்களை (Active Users) கொண்டுள்ள, அதாவது தினசரி பயனர்களை கொண்டுள்ள ஒரே காரணத்தினால் தான் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியானது, போலியான செய்திகளை (Fake News) பரப்புவதற்கான, ஆன்லைன் மோசடிகளை (Online Scams) கட்டவிழ்த்து விடுவதற்கான பிரதான இடமாக பயன்படுகிறது.
அந்த வரிசையில் வாட்ஸ்அப் மெசேஜ் வழியாக, மிகவும் வைரலாக பரவி வரும் ஒரு "புதிய உருட்டு" தான் - பிங்க் வாட்ஸ்அப் (Pink WhatsApp). அதாவது பிங்க் வாட்ஸ்அப்பை பதிவிறக்கம் (Download) செய்வதன் மூலம் பழைய பச்சை நிற வாட்ஸ்அப்பின் தோற்றத்தை முழுமையாக மாற்றலாம்.
அதுமட்டுமின்றி, பிங்க் வாட்ஸ்அப்பை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்வதன் வழியாக உங்களுக்கு சில புதிய வாட்ஸ்அப் அம்சங்களும் கிடைக்கும் என்றெல்லாம் கூறி.. ஒரு போலியான இணைப்பை (Fake Link) உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் ஆனது, வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் மும்பை காவல்துறையோ பிங்க் வாட்ஸ்அப்பின் முகமூடியை கிழித்தெறிந்து, அதனால் வரக்கூடிய விபரீதங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தெரியாமல் கூட பிங்க் வாட்ஸ்அப்பை டவுன்லோட் செய்ய வேண்டாம். அவ்வளவு ஏன், டவுன்லோட் செய்வதற்கான லிங்க்-ஐ கூட கிளிக் செய்ய வேண்டாமென்று வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை போலீசாரின் கூற்றுப்படி, வாட்ஸ்அப்பில் போலியான மெசேஜ் ஒன்று பரவி வருகிறது. அது வாட்ஸ்அப் லோகோவின் நிறத்தை (WhatsApp Logo Colour) மாற்றும் ஒரு அப்டேட்டை வழங்குவதாக கூறுகிறது. கூடுதலாக, வாட்ஸ்அப் அனுபவத்தை மேம்படுத்த உதவும் புதிய அம்சங்களை வழங்குவதாகவும் உறுதியளிக்கிறது.
ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. அந்த மெசேஜுடன் வரும் இணைப்பானது ஒரு ஃபிஷிங் லிங்க் (Phising Link) ஆகும். அதை நீங்கள் கிளிக் செய்யும் பட்சத்தில், அது உங்கள் ஸ்மார்ட்போனை பாதித்து, உங்களை பற்றிய முக்கியமான தகவல்களை திருடிக்கொளும் அல்லது ஹேக்கர்களுக்கு உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் ரிமோட் கண்ட்ரோலை கொடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிங்க் வாட்ஸ்அப் லிங்க்-ஐ கிளிக் செய்தால் என்ன நடக்கும்? உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள மொபைல் எண்கள் மற்றும் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் திருடப்படலாம். நிதி இழப்புகளை கூட சந்திக்கலாம்; உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட்கள் தவறாக பயன்படுத்தப்படலாம். ஸ்பேம் அட்டாக்கிற்கு உள்ளாகலாம்; உங்கள் மொபைல் போனானது ஹேக்கர்களால் முழுமையாக கட்டுப்படுத்தப்படலாம்.
பிங்க் வாட்ஸ்அப் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? ஒருவேளை போலியான பிங்க் வாட்ஸ்அப்பை நீங்க ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருந்தால், அதை உடனடியாக டெலிட் / அன்இன்ஸ்டால் செய்யவும். பிங்க் வாட்ஸ்அப் மட்டுமல்ல, நம்பகத்தன்மையற்ற அலல்து அறியப்படாத சோர்ஸ்களிலிருந்து கிடைக்கும் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம்.
எந்தவொரு ஆப்பை பதிவிறக்கம் செய்தாலும், அதை கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஸ்டோர் (Apple Store) அல்லது முறையான இணையதளங்களில் இருந்து மட்டுமே செய்யவும். அதுமட்டுமின்றி, சரியான அங்கீகாரம் அல்லது சரிபார்ப்பு இல்லாமல் எந்த விதமான இணைப்புகளையும். மெசேஜ்களையும் மற்றவர்களுக்கு அனுப்பவும் வேண்டாம்.