சென்னை: திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் நேற்று பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப் படுகொலை நடந்திருந்தது.
மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், காவல்துறையின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே வந்தது எப்படி? அப்படியானால், காவல்துறையினர் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைவதை காவல்துறையினரே கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்களா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.
கொலை நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இப்படி இருக்கையில், சம்பவம் நடந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதேநேரம் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.