ராணிப்பேட்டை: விடிய விடிய விடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இன்று 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சாலைகளும் தாழ்வான பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது. இந்த நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.