கோயம்புத்தூர் பூ மார்க்கெட்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விற்பனை மந்தமடைந்துள்ளது.
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை (ஆகஸ்ட் 29 ) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாளில் மக்கள் அத்திப்பூ கோலமிட்டு மகாபலி அரசரை வரவேற்பார்கள்.
அதன்படி கோவை மாவட்டம் கேரள மாநிலத்தின் அருகில் அமைந்துள்ளதால் இங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின் போதும் கேரள பூ வியாபாரிகள் கோவை வந்து பூக்களை வாங்கிச்செல்வார்கள்.
இதனால் ஓணம் கொண்டாடப்படும் வாரத்தில் ஒவ்வொரு நாளும் கோவை பூ மார்க்கெட்டில் இருந்து 100 டன் பூக்கள் கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படும். ஆனால் இந்தாண்டு கேரள வியாபாரிகள் அதிக அளவில் வராததால் நாள் ஒன்றுக்கு 20 டன் பூக்கள் மட்டுமே அனுப்பப்பட்டதாகவும், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் ஐயப்பன் கூறுகையில், "கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஊரடங்கின் போது வியாபாரிகள் பலரும் விவசாயிகளிடம் நேரடியாக சென்று பூக்களை வாங்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இதுபோக ஆன்லைனில் பூ விற்பனை செய்யப்படுவதால் 20 சதவீதம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளது. உள்ளூர் விற்பனை மட்டுமே நடைபெறுகிறது" என்றார்.