என் குழந்தையின் கை அகற்றப்பட்டது அநீதி..நீதி கிடைக்கும் வரை போராடுவேன்- தாய்

post-img

எனது குழந்தையின் கை அகற்றப்பட்டது அநீதி என்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் அஜிஷா கூறியுள்ளார். என்னுடைய மகனுக்கு நடந்தது போல வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று கூறிய அஜிஷா, நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் அஜிஷா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது ஒன்றரை வயதாகிறது. குழந்தைக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு, ஹைட்ரோகெபாலஸ் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் தலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்து சிறுவன் வீடு திரும்பிய நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் இயற்கை உபாதை கழிக்கும்போது வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் அனுமதித்தார்.

அப்போது குழந்தையின் உடல்நிலையை கண்காணித்த மருத்துவர்கள் உடனடியாக அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது குழந்தையான முகமது மகிரினுக்கு இரண்டு கையிலும் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு ஐசியூவில் வைத்து கண்காணிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 29 ஆம் தேதி குழந்தைக்கு வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் கை நிறம் மாற தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் அஜிஷா செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். மருந்து செலுத்துவதால் ஏற்பட்ட நிறம் மாற்றம் ஒரு பிரச்சனையும் இல்லையென கூறியுள்ளார். இதனையடுத்து சில மணி நேரத்திலேயே குழந்தையின் கை முழுவதுமாக நிறம் மாற தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அஜிஷா, நரம்பியல் மருத்துவரிடம் தனது மகனை காண்பித்தார். குழந்தை முகமது மகிரினை பரிசோதித்தவர்கள், குழந்தையின் வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து நேற்று அந்த குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்திய நிலையில் அறுவை சிகிச்சை நடந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தையின் வலது கை தோள்பட்டை வரை முழுவதுமாக அகற்றப்பட்டது.

செவிலியர்களின் கவனக்குறைவே குழந்தையின் கை அழுகியதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்களிம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக சுகாதாரத்துறை 3 துறை மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினாலும் அனுப்பி வைக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார். குழந்தையின் கை அகற்றப்பட்டது ஏன் என்றும் மருத்துவமனை டீன் தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம், நேற்று இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியது. 3 துறை மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரணையை மேற்கொண்டது. குழந்தையின் பெற்றோரிடம் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து இன்று விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட உள்ளது.

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஜிஷா, என்னுடைய குழந்தைக்கு என்ன நடந்தது என்று விசாரணை குழுவிடம் கூறினேன். என் குழந்தைக்கு யார் ஊசி போட்டனர் என்ன நடந்தது என்று கேட்டனர் நான் விளக்கமாக பதில் அளித்தேன். என்னுடைய குழந்தையை குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்று அமைச்சர் கூறியது வேதனையாக உள்ளது. என்னுடைய மகனின் கை அகற்றப்பட்டது அநீதி.

எதையோ மூடி மறைக்க என்னுடைய மகனுக்கு நடந்தது போல வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. நீதி கிடைக்கும் வரைக்கும் போராடுவேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அஜிஷா, 21 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து கையெழுத்து போட்டிருக்கிறேன் என்றும் அஜிஷா தெரிவித்துள்ளார்.

Related Post