சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் என்ற மலையுடன் மோடி என்ற மடுவை ஒப்பிடுவது எப்படி சரியாக இருக்க முடியும் என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக கோஷ்டிகள் ஒவ்வொன்றாக இன்று மரியாதை செலுத்தின.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் கறுப்பு உடையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழிகளை ஏற்றனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது கோஷ்டியினர் மரியாதை செலுத்தினர். இதேபோல சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தலைமையில் தனித்தனியாக மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: எம்ஜிஆரைப் பொறுத்தவரை யாருடனுமே ஒப்பிட முடியாத தலைவர். எம்ஜிஆர் ஜாதி, மத வேறுபாடுகளைப் பார்த்தவர் அல்ல. அனைவரும் போற்றக் கூடிய தலைவராக இருந்தவர் எம்ஜிஆர்.
அண்ணா திமுக என்பது ஜாதி- மதம் கடந்து சமத்துவமாக அனைவரையும் பார்க்கும் இயக்கம். எந்த நிலையிலும் எம்ஜிஆரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டுவிடவே முடியாது.
அதிமுகவின் கொள்கையே பிரிவினையை நாடோம்.. சமநிலையில் வாழ்வோம் என்பதுதான். பாஜகவின் கொள்கை இப்படியா இருக்கிறது? மதத்தால் பிரிவினையை செய்வதுதான் பாஜகவின் வேலை. சமநிலை எங்கே இருக்கிறது? வெண்ணெய் ஒரு கண்ணில். .சுண்ணாம்பு ஒரு கண்ணில் என்பதாகத்தானே இருக்கிறது? ஆகவேதான் எந்த நிலையிலும் எம்ஜிஆருடன் மோடியை ஒப்பிடவே முடியாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
மேலும் சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணா திமுக நாளுக்கு ள் பலவீனமடைந்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுயநலத்துடன் செயல்படக் கூடாது. அவர் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார் என்றார்.
இதனிடையே எம்ஜிஆரை மோடியுடன் அண்ணாமலை ஒப்பிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மதவாதிகள் குறித்து எம்ஜிஆர் சட்டசபையில் பேசிய பேச்சு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 29.3.1982-ல் தமிழ்நாடு சட்டசபையில் பேசிய முதல்வர் எம்ஜிஆர், "மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல் மற்ற மடாதிபதிகள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே _ அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை. மக்கள் நலன் காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே, மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறி செயல்பட்டால், அரசு அதை வேறு விதத்தில் சமாளிக்கும். அரசு அதற்குத் தயாராக இருக்கிறது என தெரிவித்திருந்தார்.