கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த சிங்கம்பதி, சாடிவயல், வெள்ளியங்கிரி கோவில், ஆலந்துறை, நரசீபுரம், புலகண்ட், விரயூர், இருட்டு பள்ளம், மருதமலை அடிவாரம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் முட்டத்துயல் என்ற பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்துள்ளது.
கோவையை அடுத்த பேரூர் செம்மேடு பகுதியை சேர்ந்த ஆடிட்டர் குரு. இவருக்கு தொண்டாமுத்தூரை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி, முட்டத்துவயல் பகுதியில் தோட்டம் ஒன்று உள்ளது. இவர் தோட்டத்தில் பாதுகாப்பிற்காக வேட்டை நாய்களை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று ஆடிட்டர் குருவின் தோட்டத்துக்குள் புகுந்திருக்கிறது. அந்த யானை உணவுக்காக தோட்டத்தில் ஏதாவது கிடைக்குமா என்று தேடி பார்த்திருக்கிறது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது தோட்டத்தில் இருந்த வளர்ப்பு நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்ட இருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த காட்டு யானை வளர்ப்பு நாய்களை துரத்தி தாக்க பார்த்தது. உடனே நாய்கள் குரைத்துக் கொண்டே அங்கும் இங்கும் சிதறி ஓடின.
தொடர்ந்து உணவு கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த யானை, அங்கிருந்த சைக்கிளை மிதித்து சேதப்படுத்தியது. அதன்பின்னர் கால்நடைகள் குடிக்க கேனில் வைத்திருந்த தண்ணீரை காட்டு யானை குடித்துள்ளது. பின்னர் கேனை காலால் மிதித்து நசுக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து தோட்டத்தில் வைத்திருந்த புண்ணாக்கு மூட்டையை காட்டு யானை துதிக்கையால் தூக்கி எறிந்தது. இப்படி காட்டு யானை தோட்டத்தையே துவம்சம் செய்து கொண்டிருந்ததால். தோட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பயந்து போனார்கள்.
அங்கிருந்தோர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அதேநேரம் காட்டுயானையின் அட்டகாசம் குறித்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். இந்நிலையில் தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்த சம்பவம் சாடிவயல், முட்டத்துவயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.