விருதுநகர்: நடிகர் விஜயை அரசியல்வாதியாக திமுக அங்கீகாரம் செய்யவில்லை. நாங்கள் அவரை பற்றி கவலை கொள்ள வேண்டியது இல்லை. அவருக்கு களநிலவரம் இன்னும் சரியாக தெரியாது. அவர் சினிமா ரசிகர்களை நம்பிக்கொண்டு இதையெல்லாம் பேசுவது சரியான அரசியல்வாதி என்பதற்கு உரிய நாகரீகமாக இருக்காது என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் விஜய் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூலை வெளியிட்டார். விஜயிடம் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இதில் நடிகர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். திமுகவின் பெயரை கூறாமல் அவர் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
விஜய் பேசும்போது, "சமூக நீதி பேசும் இங்கு இருக்கும் அரசு, வேங்கைவயல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததுபோலவே எனக்கு தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கடந்தும் ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்களை நம்பி இருமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை. நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள். மக்களே மைனஸாக்கி விடுவார்கள்'' என்றார்.
விஜயின் இந்த பேச்சை திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயை அரசியல்வாதியாக திமுக அங்கீகாரம் செய்யவில்லை என்று விருதுநகரில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: விஜயை ஒரு அரசியல்வாதியாக திமுக அங்கீகாரம் செய்யவில்லை. நாங்கள் அவரை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. முதலமைச்சர் சொல்லியது போல் நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம். எங்களின் குறிக்கோள் என்பது வெற்றியாக உள்ளது. 200 தொகுதிகளில் வெற்றி என்பது இப்போது 234 என்று ஆகி உள்ளது. வெற்றி தான் எங்களின் குறிக்கோள். இந்த பக்கம், அந்த பக்கம் என்று பார்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவையும், கருணாநிதியையும் பேசாமல் அரசியல் என்பது இருக்காது. தமிழ்நாட்டின் அரசியல் புள்ளியாக கருணாநிதி, திமுக இருந்தது. இப்போது புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களும், பழைய கட்சியில் இருப்பவர்களும் முதலமைச்சர், திமுகவை மையப்புள்ளியாக வைத்து தான் பேச வேண்டிய நிலை உள்ளது. விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு களநிலவரம் இன்னும் சரியாக தெரியாது. அவர் சினிமா ரசிகர்களை நம்பிக்கொண்டு இதையெல்லாம் பேசுவது சரியான அரசியல்வாதி என்பதற்கு உரிய நாகரீகமாக இருக்காது. நம்மை பொறுத்தவரை 200 அல்ல. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது உள்ளது. மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம். அதற்கான களப்பணியை நாங்கள் செய்வோம்.
வேங்கை வயலுக்கு அவர் (விஜய்) போனாரா? குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி போலீஸ் கையில் உள்ளது. போலீஸ் கண்டுபிடித்து கொண்டு இருக்கிறது. இவ்வளவு அக்கறை இருக்கிறவர்கள் அந்த பொதுமக்களுக்கு நேரில் ஆறுதல் சொன்னார்களா? களத்தில் இறங்கி மக்களுக்கான சேவையை செய்வது இல்லை. இப்போது கூட பார்த்தோம் என்று சொன்னால் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்யவில்லை. அங்கே இருக்கும் ஆட்களை அழைத்து தான் உதவிகளை செய்துள்ளார். இதுதான் அவரது அரசியல். ஆனால் எங்களின் தலைவர் மழையாக இருந்தாலும் சரி, வெள்ளமாக இருந்தாலும் சரி வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு , பேண்ட் அணிந்திருந்தால் அதனையும் மடித்து கொண்டு களத்தில் இறங்க கூடியவர் எங்களின் முதல்வர்.
நிவாரண நிதியை உயர்த்தி கொடுப்பது முதலமைச்சரின் கவனத்தில் உள்ளது. அதில் இறுதி முடிவை முதலமைச்சர் தான் எடுப்பார்.
மத்திய அரசு தனது நிதியை சொன்னபடி வழங்கவில்லை. மத்திய அரசு நிதி வருகிறபோது நாம் அதற்கு வேண்டிய நடவடிக்கை என்பது எடுக்கப்படும். மத்திய குழு ஆய்வு திருப்தி, திருப்தியில்லை என்பதை விட மத்திய குழு உடனடியாக வந்துள்ளது. முதலமைச்சர், பிரதமர் மோடியுடன் பேசியதன் விளைவாக மத்திய குழு இன்று வந்து பார்வையிட்டு வருகிறது. பார்வையிட்டு முடிந்த பிறகு அவர்கள் வழங்கும் அறிக்கைக்கு பிறகு தான் திருப்தி, திருப்தியில்லை என்பதை சொல்ல முடியும்’’ என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage