கச்சத்தீவு கடற்பரப்பு அருகே படகு மீன் பிடித்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர்.
தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை அளித்த போதிலும், இதுபோன்ற விரும்ப தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது. கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்பிடித் தடைக்காலம் முடிந்த உடன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தோணி என்பவர் தனது விசைப்படகில் 9 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் கப்பல் பழுதாகி கச்சத்தீவு கடற்பரப்பில் படகு தரை தட்டி நின்றுள்ளது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகையும், படகில் இருந்த அந்தோணி, தேசுராஜ், ரூபன் உள்ளிட்ட 9 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
எஞ்சின் பழுது காரணமாக நெடுத்தீவு பகுதியில் கப்பல் தரை தட்டியதால் இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தால் படகையும் மீனவர்களையும் விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்னர்.
இதனிடையே இன்றைய தினம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு எல்லை அருகே மீன் பிடித்ததாக கூறி 21 தமிழக மீனவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.