ஹைதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்காக வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது 9 வயதான மகன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச் சாவடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், மொகடம்பள்ளியைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவரது மனைவி ரேவதி (35). இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் புஷ்பா 2 படம் சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு கடந்த 4 ஆம் தேதி சென்றுள்ளனர். அப்போது, திடீரென அங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் வந்துள்ளனர்.
அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக பொதுமக்கள் முந்தியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி உயிரிழந்துள்ளார். அவரது மகன் ஸ்ரீதேஜ் (8) பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழுவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலுங்கானாவில் இனி எந்தவொரு படத்துக்கும் சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கப்படாது என அம்மாநில உத்தரவிட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஏற்கனவே திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூன்று பேரை கைது செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிக்கட்பாளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அவருக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், ஆவணங்கள் தாமதமாக வழங்கப்பட்டதால் ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுனை பார்க்க பல முன்னணி நடிகர்கள் அவரது வீட்டுக்கு வந்து சந்தித்தனர்.
இறந்த ரேவதியின் குடும்பத்தை பார்க்க அல்லு அர்ஜுன் நேரில் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கோமாவில் இருக்கும் அந்த சிறுவனை பார்க்கச் செல்லவில்லை. புஷ்பா 2 ரசிகை மரண வழக்கில் தெலுங்கானா காவல்துறை அதிகாரிகள் அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.இதற்கிடையே பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஸ்ரீ தேஜ் (8) மூளைச் சாவடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புஷ்பா 2 பொதுமக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. படம் வெளியாகிய ஆறு நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
12 நாட்கள் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் ரூ. 1,350 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வாரத்தின் இறுதிக்குள் புஷ்பா 2 ரூ. 1, 500 கோடியை கடக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.