பாஜகவால் இது மட்டும் முடியவே முடியாது.. "ஒரே நாடு ஒரே தேர்தல்.." பாயிண்டை பிடித்த சசி தரூர்

post-img
டெல்லி: மத்திய அரசு இன்றைய தினம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே இந்த மசோதா முட்டாள்தனமானது என்று கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், பாஜகவால் இந்த மசோதாவை நிச்சயம் நிறைவேற்றவே முடியாது என்று காட்டமாகப் பேசினார். இப்போது மத்திய அரசுகளுக்கும் மாநில அரசுகளுக்கும் தனித்தனியாகவே தேர்தல் நடக்கிறது. இதனால் நாட்டில் எப்போதும் தேர்தல் இருந்து கொண்டே இருப்பது போன்ற சூழல் நிலவுகிறது. இதை மாற்றி ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டு வர பாஜக முயல்கிறது. கடும் எதிர்ப்பு: அதாவது நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநிலச் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். பாஜக இதைத் தனது தேர்தல் வாக்குறுதியிலேயே குறிப்பிட்டு இருந்தது. இதற்கிடையே இது தொடர்பாக இரு மசோதாக்களை மத்திய பாஜக அரசு இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே இன்று லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், "ஒரே நாடு ஒரே தேர்தல்" விவகாரத்தில் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பான அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், அது பாஜகவிடம் இல்லை என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் சாடியுள்ளார். சசி தரூர்: அவர் மேலும் பேசுகையில், "இந்த மசோதாவை நாங்கள் (காங்கிரஸ்) மட்டும் எதிர்க்கவில்லை. பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்துள்ளன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இது அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாகும். மத்திய உள்ள ஒரு அரசு கவிழ்கிறது என்றால் மாநில அரசும் ஏன் கவிழ வேண்டும். ஒருவர் ஆட்சியை அமைக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்து வாக்களிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது வேறு யாரோ ஒருவரது ஆட்சி கவிழ்கிறது என்பதற்காக மற்றவர்கள் ஏன் ஆட்சியை இழக்க வேண்டும். இதில் அர்த்தமே இல்லை. நாடாளுமன்ற அமைப்பில் இந்த விவகாரங்களில் நிலையான விதிமுறைகளை வைத்திருக்க முடியாது. வெவ்வேறு சூழல்: 1969இல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது முடிவுக்கு வந்தது.. நம் நாட்டில் உள்ள நாடாளுமன்ற அமைப்பில் அதைச் செயல்படுத்த முடியாது என்பதாலேயே அந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. இங்கே மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வெவ்வேறு சபைகள், வெவ்வேறு பெரும்பான்மைகள், வெவ்வேறு கூட்டணிகள். அவை எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்காலத்தில் மத்திய அரசோ அல்லது எதாவது ஒரு மாநில அரசோ கவிழ்ந்தால் மீண்டும் அதே குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த மசோதாவை கொண்டு வருவது அர்த்தமற்றது. இது முழுக்க முழுக்க முட்டாள்தனம் என்பதே எனது கருத்து. எப்படி இருந்தாலும் அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. அது பாஜகவுக்கு இல்லை என்பதை இன்றைய தினம் நடந்த வாக்கெடுப்பு உறுதி செய்துவிட்டது. அர்த்தமற்றது: இப்போது மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பியுள்ளனர். நாடாளுமன்ற கூட்டுக்குழுவை தங்களுக்குச் சாதகமாக, தங்கள் எம்பிகள் அதிகம் இருப்பது போல பாஜக உருவாக்கலாம்.. ஆனால், அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை இல்லை. இதனால் அரசியலமைப்புத் திருத்தம் செய்யவே முடியாது. எனவே இந்த விவாதம் என்பது பயனற்ற ஒன்று தான்" என்றார்.

Related Post