பயிற்சி மருத்துவரை கடித்த மர்ம பூச்சி.. பீதியில் கோவை அரசு மருத்துவமனை.. முதல்வர் விளக்கம்

post-img
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் மர்ம பூச்சி கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை முதல்வர் நிர்மலா விளக்கமளித்துள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கான முக்கிய மருத்துவமனையாக கோவை அரசு மருத்துவமனை உள்ளது. ஆனால் அங்கு மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் போதிய பாதுகாப்பு இல்லை என்ற புகார் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, பயிற்சி பெண் மருத்துவரிடம் ஒரு நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் தங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவர் ஒருவரை நேற்று விஷ பாம்பு கடித்து விட்டதாக தகவல் வெளியானது. இது மருத்துவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மருத்துவருக்கு கோவை அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் கூறுகையில், “கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரம் சரியாக இல்லை. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. ஏதாவது பிரச்னை எழுந்தால் மட்டுமே நிர்வாகம் சம்பிரதாயத்துக்காக நடவடிக்கை எடுக்கிறது. மற்றபடி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.” என்றனர். இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் ஜெயக்குமார் என்ற மாணவர் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் உள்ளார். மாணவர் ஜெயக்குமாரை பாம்பு கடித்து விட்டதாக தகவல் வெளியானது. ஜெயக்குமார் பணி முடிந்து செல்லும்போது அவரை ஏதோ ஒன்று கடித்துள்ளது. சாதாரண பூச்சி என நினைத்து அவர் விடுதிக்கு சென்றுள்ளார். நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் எழுந்தபோது வலி அதிகமாக இருந்துள்ளது. மேலும் 2 புள்ளி போல காயம் இருந்துள்ளது. அந்த மாணவருக்குமே அது பூச்சியா அல்லது வேறு ஏதாவதா என்று தெரியவில்லை. அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் தற்போது நலமுடன் உள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் தான் உள்ளார். மருத்துவமனை வளாகத்தில் பணியாளர்கள் தங்கும் இடத்தை தூய்மையாக வைக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுப்பணித்துறை மற்றும் ஒப்பந்த ஊழியர்களிடமும் வளாகத்தை தூய்மையாக வைக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். மாணவரை கடித்தது என்ன மாதிரியான பூச்சி என்று விசாரணை நடத்தி வருகிறோம். மேற்கொண்டு இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் கவனமாக பணியாற்ற வேண்டும்.” என்றார்.

Related Post