வாஷிங்டன்: சிரியாவில் ஆட்சி அதிகாரம் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்ற நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் பஷார் அல் அசாத், ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். ரஷ்யாவில் சுமார் 2 ஆயிரம் கோடி அளவுக்கு ரொக்கமாக பணத்தை அசாத் எடுத்து சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானங்களில் ரொக்கமாக சுமார் 2 டன் அளவுக்கு கட்டுக்கட்டாக பணத்தை ரஷ்யாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அசாத் பதுக்கியதாக சொல்லப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வந்தது. சிரியாவில் அதிபராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வந்த பஷார் அல் - ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் சண்டையிட்டு வந்தன. இந்த நிலையில், தான் கடந்த மாத இறுதியில் உள்நாட்டு போர் உச்சம் அடைந்தது.
நாட்டை விட்டு ஓட்டம்: சிரியாவில் முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், நிலைமை கை மீறி போனதை உணர்ந்த பஷார் அல் அசாத், நாட்டை விட்டு தப்பி ஓடினார். முதலில் பஷார் அல் அசாத் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் பரவியது. ரேடாரில் இருந்து விமானம் திடீரென மாயமனதால் இந்த தகவல் பரவியது. ஆனால், அவர் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவில் தஞ்சம் அடைந்திருக்கிறார் என்ற தகவல் சில நாட்கள் கழித்து தான் தெரியவந்தது.
2082 கோடி ரூபாய்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனிப்பட்ட முறையில் அவருக்கு அடைக்கலம் அளிக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. ரஷ்யாவில் பஷார் அல் அசாத் எங்கு உள்ளார் என்ற எந்த விவரமும் தற்போது வரை வெளியாகவில்லை. சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ள பசார் அல் அசாத், சுமார் 250 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,082 கோடி) பணத்தை ரஷ்யாவில் பதுக்கியிருக்கலாம் என்று தகவல் வெளியகியுள்ளது.
2 டன் எடை பணக்கட்டுகள்: பஷார் அல் அசாத் நாட்டை விட்டு செல்லும் போதே இவ்வளவு பெரிய தொகையை எடுத்து செல்லவில்லை. மாறாக இரண்டு ஆண்டுகளாக 2018 -19 ஆம் ஆண்டுகளில் இந்த பரிவர்த்தனை நடைபெற்றதாம். 500 யூரோ தாள்கள், 100 டாலர்கள் கட்டுக்கட்டாக சுமார் 2 டன் எடை அளவுக்கு ரொக்கமாக விமானம் மூலமாக இந்த பணம் மாஸ்கொவில் உள்ள Vnukovo விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ரஷ்ய வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன.
அரை நிர்வாண படங்கள்: இதே கால கட்டத்தில் அசாத்தின் உறவினர்கள் ரகசியமாக ரஷ்யாவில் சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கிடையே, பசார் அல் அசாத்தின் அரை நிர்வாண படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் அலப்போ நகரை கைப்பற்றிய போது அதிபர் மாளிகையையும் சூறையாடினர்.
மாளிகையில் இருந்த ஆல்பம்: அப்போது, அதிபர் மாளிகையில் இருந்த பல்வேறு சொகுசு வசதிகள் குறித்த வீடியோவும் வெளியாகின. அவரது மாளிகையில் இருந்த ஒரு ஆல்பத்தில் தான் தற்போது வைரலாகும் புகைப்படம் இருந்ததுள்ளது. பஷர் அல்-அசத்தின் மூத்த மகன் ஹஃபீஸ் அல்-அசாத் தற்போது மாஸ்கோவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சிரிய அதிபராக இருந்த அசாத் குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 1 பில்லியன் முதல் 2 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2022-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.