கோவை: வந்தே பாரத் ரயில் பெட்டியில் புகை வந்ததை தொடர்ந்து, கற்பூரம் ஏற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று மீண்டும் பக்தர்களுக்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. என்ன நடந்தது காட்பாடியில்?
நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே, 100க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன... வேகமாகவும், களைப்பின்றியும், பயணியர் உட்கார்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்கள், மணிக்கு 120 கி.மீ., வேகத்துக்கு மேல் பயணிக்கின்றன. அதனால்தான், வந்தே பாரத் ரயில்களுக்கான வரவேற்பு பயணிகளிடம் அதிகரித்தபடியே வருகிறது.
வந்தே பாரத்: நம்முடைய தமிழகத்திலும் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், சென்னை - கோவை ரயிலானது, கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
வாரந்தோறும் புதன்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இந்த ரயில் இயக்கப்படுகின்றன. 20643 / 20644 என்ற எண் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருமார்க்கங்களிலும் நின்று செல்கிறது.
காட்பாடி ஸ்டேஷன்: 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், மணிக்கு சராசரியாக 80 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்திலும் இயக்கப்படுகிறது. அந்தவகையில், நேற்று முன்தினம் சென்றுள்ளது.. அப்போது காட்பாடி ரயில் நிலையத்தை தாண்டியதுமே, "C1" பெட்டியில் தானியங்கி கதவுகள் அருகே, திடீரென புகை வெளியேற துவங்கிவிட்டது.. ஸ்லைடிங் கதவுகள் அருகே புகை வெளியேறியதை பார்த்ததுமே பயணிகள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
உடனடியாக 139 என்ற உதவி எண்ணுக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் தகவல் தந்தார்கள். இதையடுத்து, ரயிலிலிருந்த இன்ஜினியர் மற்றும் கேட்டரிங் அலுவலர் ஆகியோர் விரைந்து புகையை தடுத்து நிறுத்தினார்கள்.. எனினும், ஏசி கோச்சிற்குள் புகை சூழ்ந்து கொண்டது.
ஏசி பெட்டிகள்: இதைப்பார்த்து பதறிப்போன பயணிகள், ரயில் பெட்டிகளின் கதவை திறந்து விடுமாறு சொன்னார்கள்.. ஆனால் டிக்கெட் பரிசோதகர் அதற்கு மறுத்துவிட்டாராம்.. ஆனால், ரயில்வே ஊழியர்கள் பயணிகளிடம், "ஷார்ட் சர்க்கியூட் காரணமாகத்தான் இப்படி சிறிய புகை ஏற்பட்டுள்ளது, தீவிபத்து ஒன்றும் ஏற்படவில்லை, தொடர்ந்து பயணம் செய்யலாம், எந்த பாதிப்பும் இல்லை" என்று சொல்லி, பயணிகளின் பதற்றத்தையும் தணித்துள்ளனர்.
இதற்கு பிறகு, சேலம் ரயில்வே ஸ்டேஷனில், ஆய்வுக்கு பின் ரயில் புறப்பட்டது.. பயணிகளும் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.. எனினும், ஈரோடு ஸ்டேஷன் வரும்வரை, புகையின் தாக்கம் இருந்ததாக பயணிகள் கூறுகிறார்கள்.
மீண்டும் எச்சரிக்கை: இந்நிலையில், சேலம் கோட்ட ரயில்வே, ரயில்களில் கற்பூரம், விளக்கு ஏற்றுவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது
"ஆன்மிகப்பயணம் மேற்கொள்ளும் போது, ஒரு சில பயணியர், ரயில்களில் கற்பூரம், விளக்கு ஏற்றும் செயல்களை பின்பற்றுகின்றனர். இதன் காரணமாக, தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகிறது.
அசம்பாவிதம்: இதைக்கருத்தில் கொண்டு, பயணியர் இத்தகைய நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிபொருட்களை எடுத்து செல்லும் பயணியர் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், பயணியர், 139 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்" என்று சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage