சென்னை: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மரியாதையாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியன்று நடந்த அரசியல் சாசனம் மீதான விவதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "இப்போது 'அம்பேத்கர், அம்பேத்கர்' என்று கோஷம் போடுவது பேஷனாகி விட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்," என்று கூறினார். அமித் ஷாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அம்பேத்கர் பற்றி அமித் ஷா இவ்வாறு பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும், அமித்ஷா கருத்து குறித்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அமித்ஷா பேச்சுக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்தது. இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்று அமித் ஷாவை கண்டித்து முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "பிரதமர் மோடி, அமித் ஷாவை விட்டு ஆழம் பார்த்துவிட்டு, அதன்பிறகு ரியாக்ஷனை பார்த்துவிட்டு தானே பேச திட்டமிட்டிருக்கிறார். பிரதமர் மோடியின் கருத்தையே அமித் ஷா சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஒரு போராட்டம் தொடங்கினால் அது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது வரலாறு. மரியாதையாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் கேட்காவிட்டாலும், ஜனநாயகத்தின் மீது பிரதமர் மோடிக்கு நம்பிக்கை இருந்தால் அமித்ஷாவை 6 மாதத்திற்காவது அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். இதுதான் அவர் மக்களை மதிப்பதற்கு அடையாளம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தனது பேச்சு சர்ச்சையாக வெடித்த நிலையில், அமித்ஷா விளக்கம் அளித்திருந்தார். அதில், "எனது பேச்சை முழுமையாக கேளுங்கள். அதன்பின்னர் விமர்சிக்கலாம். நாடாளுமன்றத்தில் நான் பேசியதை காங்கிரஸ் கட்சியினர் திரித்து கூறுகிறார்கள். அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகதான். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ்தான் அவருக்கு எதிரானது." எனத் தெரிவித்திருந்தார்.