ஆளுநர் ரவி கைக்கு போகப்போகும்.. 19 முக்கிய ஃபைல்கள்.. உற்று கவனிக்கும் திமுக.. என்னங்க நடக்குது?

post-img
சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 2 நாள் நடந்து முடிந்திருக்கிறது. இதில் 19 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவைகள் ஆளுநருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த சட்ட மசோதாக்களில் எத்தனை மசோதாக்களுக்கு ஆளுநர் அப்ரூவல் தருவார் என தெரியவில்லை என்கிறார் கள். ஆனால், முந்தைய காலங்கள் போல, மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்ய மாட்டார்னு நினைக்கிறோம் என்கிறது சட்டப் பேரவை அலுவலக அதிகாரிகள். இரண்டு நாள் பேரவை கூட்டத்தில் ஓ.பி.எஸ். கலந்து கொள்ளவில்லை. கலைஞர் பாணியில், பேரவைக்கு வந்தார். பேரவையின் நுழைவு வாயில் உள்ள லெட்ஜரில் கையெழுத்துப் போட்டுவிட்டு தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார். கடந்த சட்டமன்ற கூட்டம் வரையில், அதிமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக ஓபிஎஸ் இருந்தார். அதனால் அவருக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகே முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, எதிர்க்கட்சித் துணைத்தலைவராக உதயக்குமார் நியமனத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதால், எடப்பாடிக்கு அருகே உதயக்குமாருக்கு இடம் ஒதுக்கப்பட்டதுடன், பின் வரிசைக்கு தள்ளப்பட்டு விட்டார் ஓபிஎஸ். இதனை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியாததால், பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்கின்றனர். ஆளுநர் ஆலோசனை: தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர். என் ரவியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு முடிந்துவிட்டது. அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரவீந்திர நாராயண ரவி எனப்படும் ஆர்என் ரவி தமிழக ஆளுநராக பணியாற்றி வருகிறார். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை, ஐபி அதிகாரி ஆவார். ஆர். என் ரவி ஆகஸ்ட் 1, 2019 முதல் 9 செப்டம்பர் 2021 வரை நாகாலாந்தின் ஆளுநராகவும், மேகாலயா ஆளுநராக 18 டிசம்பர் 2019 முதல் 26 ஜனவரி 2020 வரையிலும் பணியாற்றினார். அவரின் பதவி இன்னும் அதிகாரபூர்வமாக நீட்டிக்கப்படவில்லை. இதற்கு இடையில்தான் தேசிய பாதுகாப்பு அறிவுரை கழக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையின் போது தமிழ்நாடு சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு தொடர்பான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டது அதிர்ச்சி அளித்தது. தேசிய பாதுகாப்பு அறிவுரை கழகத்தின் உறுப்பினர்களுடன் ராஜ்பவனில் சீரியஸ் டிஸ்கஸ் நடத்தியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த கூட்டத்தில் 10 பேர் கலந்து கொண்டனர். தேசிய பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் சமீப மாதங்களில் நடந்துள்ள சில சட்டம் ஒழுங்குக்கு எதிரான விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த சில கொலைகள், தாக்குதல்கள் பற்றியெல்லாம் இதில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. தேசிய பாதுகாப்பு அறிவுரை கழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து கிடைத்த பல தகவல்களின் அடிப்படையிலும் இந்த ஆலோசனை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Related Post