10 ஆண்டுகளில் அதிக லாபத்தை அள்ளி தந்தது எது? "தங்கம் vs நிலம் vs பங்குச்சந்தை" எதிர்பார்க்காத முடிவு

post-img
மும்பை: இந்த காலத்தில் நாம் பணத்தைச் சேர்த்து வைக்கும் அதே அளவுக்கு முதலீடும் முக்கியம். சரியான துறைகளில் சரியான அளவு முதலீடு செய்யவில்லை என்றால் பணவீக்கம் காரணமாக நமது பணத்தின் மதிப்பு சரிந்துவிடும். அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் எது நமக்கு அதிக லாபத்தைக் கொடுத்துள்ளது.. எது குறைந்தபட்ச லாபத்தைக் கொடுத்துள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம். நாம் பணத்தைச் சரியான துறைகளில் முதலீடு செய்வது ரொம்பவே முக்கியம்.. இல்லையென்றால் பணவீக்கத்தால் பணத்தின் மதிப்பு சரிந்துவிடும். இந்தாண்டு பங்குச்சந்தையும், தங்கமும் அதிக லாபம் கொடுத்தவையாக இருக்கிறது. இதுபோல கடந்த 11 ஆண்டுகளில் year on year அடிப்படையில் எதில் லாபம் அதிகம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இது குறித்த முடிவுகளை மணிகன்ட்ரோல் ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்த நிலையில், அதில் சில முடிவுகள் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 2014ம் ஆண்டு அதிகபட்ச லாபத்தைக் கொடுத்துள்ளது பங்குச்சந்தை. அந்தாண்டு தான் மோடி முதல்முறையாகப் பிரதமராகப் பதவியேற்று இருந்தார். அந்த ஆண்டு பங்குச்சந்தை 39.3% லாபத்தைக் கொடுத்து இருந்தது. தொடர்ந்து ரியல் எஸ்டேட் 16.9% லாபத்தையும் கடன் பத்திரங்கள் 14% லாபத்தையும் தங்கம் 0.8% லாபத்தையும் கொடுத்து இருந்தது. 2015ம் ஆண்டை பொறுத்தவரை ரியல் எஸ்டேட் தான் அதிகபட்சமாக 9.7% லாபத்தைக் கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் இந்த ஓராண்டில் மட்டுமே அதிக லாபத்தைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கடன் பத்திரங்கள் 8.6% லாபத்தையும். பங்குச்சந்தை 0.2% லாபத்தையும் கொடுத்தது. அந்தாண்டு தங்கம் 7.8% நஷ்டத்தைக் கொடுத்து இருந்தது. தொடர்ந்து 2016இல் கடன் பத்திரங்களும் (12.9%), 2017இல் பங்குச்சந்தையும் (37.7%) அதிக லாபத்தைத் தந்து இருக்கிறது. 2018 (6.9%), 2019 (22.9%), 2020 (26.2%) என்று மூன்று ஆண்டுகள் தங்கம் தான் அதிகபட்ச லாபத்தைக் கொடுத்துள்ளது. 2021ம் ஆண்டு பங்குச்சந்தை 31.6% லாபத்தைக் கொடுத்த நிலையில், 2012ம் ஆண்டு மீண்டும் தங்கம் அதிகபட்சமாக 13.9% லாபத்தைக் கொடுத்துள்ளது. கடந்தாண்டும் இந்தாண்டும் கிட்டத்தட்ட ஒரே பேட்டர்ன் தான். அதாவது முதலிடம் பங்குச்சந்தை, அடுத்தடுத்த இடங்களில் தங்கம், கடன் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவை இருக்கிறது. இந்தாண்டு பங்குச்சந்தைக்கும் தங்கத்திற்கும் வெறும் 0.6% மட்டுமே வேறுபாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கடந்த 11 ஆண்டுகளில் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் பங்குச்சந்தை அதிக லாபம் கொடுத்துள்ளது. 4 ஆண்டுகள் தங்கம் அதிக லாபத்தை கொடுத்துள்ள நிலையில், ரியல் எஸ்டேட் மற்றும் கடன் பத்திரங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே அதிகபட்ச லாபத்தைக் கொடுத்துள்ளது. அதுவும் 8 ஆண்டுகளுக்கு முன்பு தான். குறைந்தபட்ச லாபம் என்றால் ரியல் எஸ்டேட்டை சொல்லலாம். அதுதான் 4 ஆண்டுகள் குறைந்தபட்ச லாபத்தைக் கொடுத்துள்ளது. குறிப்பாகக் கடந்த 6 ஆண்டுகளில் 4 ஆண்டுகள் அதன் லாபம் குறைந்தபட்சமாக இருக்கிறது. தங்கத்திலும் 4 ஆண்டுகள் லாபம் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒப்பீட்டளவில் கடந்த 10 ஆண்டுகளில் அதிக லாபத்தைப் பங்குச்சந்தை கொடுத்துள்ளது. அடுத்த தங்கம் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக 6 ஆண்டுகளில் தங்கம் சிறப்பாக இருக்கிறது. கடன் பத்திரங்களில் லாபம் பெரியளவில் இல்லை என்றாலும் நஷ்டத்தை அது கொடுக்கவே இல்லை.. இதில் கடைசி இடத்தில் ரியல் இஸ்டேட் வருகிறது. கடந்த 2014க்கு பிறகு ஒரு முறை கூட ரியஸ் எஸ்டேட் இரட்டை இலக்கில் லாபத்தைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post