சிட்னி: எலான் மஸ்க்கின் எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா அரசு ரூ.3.20 கோடி அபராதம் விதித்துள்ளது.
சமூக ஊடகங்களில் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளம் எவ்வித தடையுமின்றி ஆபாசப் படங்கள், வீடியோக்களை உலவ அனுமதிக்கிறது. உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பிரபலங்கள், தங்கள் அதிகாரப்பூர்வ பக்கங்களை எக்ஸ் தளத்தில் நிர்வகித்து வருகின்றனர். அன்றாட அறிவிப்புகளை இதில் வெளியிட்டு வருகின்றனர். வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் புழங்கும் இடமாக ட்விட்டர் விளங்குகிறது. அப்படிப்பட்ட சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் ஆபாசக் குப்பைகளுக்கும் பஞ்சம் இல்லை.
அவற்றிலும், குழந்தைகளின் ஆபாச படங்களுக்கும் எக்ஸ் தளம் எவ்வித தடையும் போடுவதில்லை. இதனால், லட்சக்கணக்கான ஆபாச பக்கங்கள், நாள்தோறும் குழந்தைகளும் அடங்கிய ஆபாச நிர்வாண படங்களை ட்விட்டரில் பதிவேற்றி வருகின்றன. எக்ஸ் யூசர்கள் ரிப்போர்ட் அளிக்கும் பக்கங்கள் எக்ஸ் நிறுவனத்தால் நீக்கப்பட்டாலும், புதிது புதிதாக கணக்குகளைத் தொடங்கி, ஆபாச படங்களை புழக்கத்தில் விடுவது தொடர்ந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் - மே மாதத்தில் மட்டுமே சுமார் 10 லட்சம் எக்ஸ் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவை குறிப்பாக குழந்தை பாலியல் மற்றும் ஒப்புதல் பெறாத நிர்வாண பதிவுகள் (ஸ்கேண்டல்) படங்களை பதிவிட்டதால் இந்த தடை நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளன. இன்னும் பல லட்சக்கணக்கான அக்கவுண்ட்களின் மூலமாக இன்னும் ஆபாச படங்கள் பதிவிடப்பட்டே வருகின்றன.
ட்விட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். வாங்கியது முதலே, கோடிக்கணக்கான யூசர்கள் பயன்படுத்தும் ட்விட்டரை ஒரு விளையாட்டு பொம்மை போல் தனது இஷ்டத்திற்கு மாற்றி வருகிறார். முக்கிய உயரதிகாரிகள் உட்பட பலரை வேலையை விட்டு தூக்கினார். அதிகாரப்பூர்வ கணக்கு (ப்ளூ டிக்) வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
ஹமாஸ் ஆதரவாளர்கள் ட்விட்டர் அக்கவுண்டுகளை அதிரடியாக நீக்கிய எக்ஸ்..முக்கிய அறிவிப்பு
மேலும் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், தனி நபர்களுக்கு என தனித்தனியாக வெவ்வேறு நிறங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான குறியீடுகளை வழங்கினார். பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் பெயரையே மாற்றினார். எக்ஸ் என மாற்றம் செய்யப்பட்டது. ட்விட்டரின் லோகோவான நீலக் குருவி நீக்கப்பட்டு எக்ஸ் என்ற எழுத்து வைக்கப்பட்டது. வலைதள பக்கத்தின் நிறமும் அதன் அடையாளமான நீல நிறத்தில் இருந்து கருப்பு நிறத்துக்கு மாற்றப்பட்டது.
இப்படி, ட்விட்டரை வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களைச் செய்து வரும் எலான் மஸ்க், ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என பலரும் விமர்சிக்கிறார்கள். உதாரணமாக, எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள், காட்சிகள், சிறார் ஆபாச படங்கள் மலிந்து கிடக்கும் நிலையில், அவற்றைத் தடுக்க எந்த ஆக்ஷனையும் எலான் மஸ்க் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
இந்நிலையில் தான் எக்ஸ் தளத்திற்கு ஆஸ்திரேலிய அரசு அபராதம் விதித்துள்ளது. எக்ஸ் தளத்தில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் சகட்டுமேனிக்கு உலா வரும் நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் மீது ஆஸ்திரேலிய நாட்டு அரசின் இ-பாதுகாப்பு ஆணையர் ஆக்ஷன் எடுத்துள்ளார். சிறார் பாலியல் படங்கள் எக்ஸ் தளத்தில் பகிரப்படுவதை முறையாக கையாளாத எக்ஸ் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய அரசின் இ பாதுகாப்பு ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், எக்ஸ் நிறுவனம் அதற்கு முறையான விளக்கம் அளிக்கவில்லை.
இதையடுத்து, எக்ஸ் நிறுவனத்துக்கு 610,500 ஆஸ்திரேலிய டாலர்களை அபராதமாக விதித்துள்ளது, அந்நாட்டின் இணைய பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையம். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.3.20 கோடி ஆகும். எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் இன்னும் 28 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். அல்லது விதிக்கப்பட்டுள்ள அபராதத்தைச் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பாதுகாப்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக ஆஸ்திரேலியாவின் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 610,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்ட முதல் ஆன்லைன் தளமாகியுள்ளது எக்ஸ்.ஆஸ்திரேலியா அரசு எக்ஸ் நிறுவனத்துக்கு விதித்துள்ள அபராதம் முக்கியமான செக் எனக் கூறப்படுகிறது. இனியாவது அந்த நிறுவனம் பல்வேறு நாடுகளிலும், பாலியல் காட்சிகள், ஆபாச படங்கள் பகிரப்படுவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.