நாடாளுமன்றத்தில் நாளை தாக்கலாகும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! பாஜகவிடம் இருந்து வந்த மேஜர் அறிவிப்பு

post-img
டெல்லி: இப்போது நமது நாட்டில் லோக்சபா தேர்தலும் அனைத்து மாநிலச் சட்டசபைத் தேர்தல்களும் தனித்தனியாகவே நடந்து வருகிறது. அதை மாற்றி மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கொண்டு வரத் தீவிரமாக முனைப்புக் காட்டி வருகிறது. இது தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இதை நாளைய தினம் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இப்போது லோக்சபா தேர்தலும் பல்வேறு மாநில தேர்தல்களும் தனித்தனியாகவே நடந்து வருகிறது. இதனால் எல்லா ஆண்டுகளிலும் எதாவது ஒரு தேர்தல் என்ற சூழலே நிலவுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல்: இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் இதைக் கருத்தில் கொண்டு நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதை ஆய்வு செய்ய மத்திய அரசு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்த சூழலில், அந்த பரிந்துரைகள் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தலை வலியுறுத்தி மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு விரைவில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. இன்றைய தினமே இந்த மசோதா தாக்கலாக வாய்ப்பு இருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. இருப்பினும், இன்று காலை அந்த மசோதா அலுவல் அட்டவணையில் இருந்து நீக்கப்பட்டது. அதன் பிறகு இந்த மசோதா அடுத்த வாரம் தான் தாக்கலாகும் என்றும் தகவல் வெளியானது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் அமளியை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே பாஜக இந்த உத்தியைப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். ஏனென்றால் அலுவல் அட்டவணையில் இருந்து நீக்கப்பட்டாலும் கூட லோக்சபா சபாநாயகர் அனுமதியுடன் கடைசி நேரத்தில் துணைப் பட்டியல் மூலம் மசோதாவை கொண்டு வரலாம். நாளை தாக்கல்: இந்தச் சூழலில் நாளைய தினம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நாளை செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். அத்துடன் யூனியன் பிரதேச சீர்திருத்தங்கள் தொடர்பான மசோதாவையும் அவர் தாக்கல் செய்ய இருக்கிறார். நாடாளுமன்ற கூட்டுக்குழு: தனது தேர்தல் வாக்குறுதிகளிலேயே பாஜக இதை ஒரு வாக்குறுதியாக அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் நிலையில், அதைத் தொடர்ந்து விரிவான ஆலோசனைக்காக இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சட்டத்துறை அமைச்சர் கோரிக்கை விடுப்பார். அதைத் தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும். நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக பாஜக இருப்பதால் அவர்களுக்கே இந்த கூட்டுக்குழுவின் தலைவர் பதவியையும், பல உறுப்பினர் பதவிகளும் கிடைக்கும். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நாளை மாலைக்குள் குழுவில் யாரெல்லாம் இருப்பார்கள் என்பதை அறிவிப்பார் எனத் தெரிகிறது. பாஜக முக்கிய அறிவிப்பு: இதற்கிடையே இந்த மசோதா எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நிறைவேறுவதை உறுதி செய்யப் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் நாளை இரண்டு அவைகளிலும் கட்டாயம் கலந்து கொண்டிருக்க வேண்டும் என பாஜகவின் தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளார்.

Related Post