தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெப்பம் சுட்டெரிக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் தகிக்கிறது. இதனால் கோடை வெயிலை சமாளிக்க பலர் மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்கிறார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டும் கோடையை சமாளிக்க தமிழகத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலை பிரதேசங்களுக்கு மக்கள் படையெடுக்கிறார்கள். கடந்த 2020 , 2021 ஆம் ஆண்டு கொரோனா காலம் என்பதால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
2022 ஆம் ஆண்டு கொரோனா விதிகள் திரும்ப பெறப்பட்டு சுற்றுலா தலங்கள் திறந்திருந்தாலும் சில கட்டுப்பாடுகளால் மக்களால் அந்த அளவுக்கு என்ஜாய் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா தமிழகத்தில் அதிகமாக இருந்து வந்தாலும் கூட மக்கள் கூட்டமான இடங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கவில்லை.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று பகல் பொழுதில் இதமான சீதோஷ்ணமும் மாலையில் தொடங்கிய மழை இரவு வரையும் நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தொடர் விடுமுறையால் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள்.
ஏராளமானோர் கார், பைக், டிராவல்ஸ் வாகனம், பஸ் உள்ளிட்டவற்றில் வருகிறார்கள். இதனால் கொடைக்கானல் நகருக்குள் உள்ள நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. வாகனங்கள் இன்ச் இன்ச்சாக ஊர்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போதிய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
இதில் வாகன ஓட்டிகள் ஒருவருக்கு ஒருவர் வரிசையில் வராமல் முந்தி செல்ல முற்படுவதால் சிறிய விபத்துகளும் வாகனத்தில் சிறிய கீறல்களும் ஏற்படுவதாக பயணிகள் கூறுகிறார்கள். கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களான வெள்ளிநீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவி, நட்சத்திர ஏரி, பிரையண்ட்பூங்கா, மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. நட்சத்திர ஏரியில் அமைந்துள்ள செயற்கை நீரூற்றும் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சாரல் மழை பெய்ததால் அதில் நனைந்தபடியே ஏரியில் படகு சவாரி செய்தனர். அது போல் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். பெரும்பாலான தங்கும் விடுதிகள் ஹவுஸ் புல் போர்டை வைத்திருந்தன.
மே மாதம் இந்த சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹனிமூனுக்காக புதுமண தம்பதிகளும் கொடைக்கானலில் குவிகிறார்கள். இங்கு மலர் கண்காட்சி நடத்தும் போது மேலும் கூட்டம் அதிகரிக்கும் என தெரிகிறது. இதே நிலைதான் ஊட்டியிலும் இருப்பதாக சொல்கிறார்கள்.
ஊட்டி பொட்டானிக்கல் கார்டனில் நேற்றைய தினம் அதிகம் பேர் வாகனங்களில் வந்தனர். இதனால் வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து சென்றன. கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிந்து கொண்டு செல்வது பாதுகாப்பானது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அவ்வபோது சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்துக் கொள்ளவும் தெரிவித்துள்ளனர்.