நாட்டாமை படத்தில் வரும் செந்திலை, கவுண்டமணி “டேய் தகப்பா” என அழைக்கும் தர்மசங்கடமான சூழலில் தான் தற்போது நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் நிலைமை உள்ளது. கிரிக்கெட் உலகில் பல வியப்பூட்டும் சாதனைகளை தகர்த்தெறிந்த யுவராஜ் சிங் முதல் அண்மையில் ஓய்வை அறிவித்த அஸ்வின் வரை பல கிரிக்கெட் வீரர்களுக்கு தங்கள் தந்தையால் தர்மசங்கடங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் அசாத்திய திறமையுடன் விளையாடி வந்த நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்குக்கும், மகேந்திர சிங் தோனிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. காலப்போக்கில் யுவராஜ் சிங் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார், இதற்கு முக்கிய காரணம் தோனிதான் என்று யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் போகும் இடங்களில் எல்லாம் கருத்து தெரிவித்து வந்தார்.
இதேபோல் கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத்தும் தனது மகனுக்கு அண்மையில் தர்மசங்கடத்தை அளித்திருந்தார். பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வந்தாலும் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி, கோலி, ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகிய 4 பேரும் சேர்ந்து அழித்துவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.
யுவராஜ், சஞ்சு சாம்சன் வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துள்ளார். சர்வதேச போட்டியில் இருந்து திடீரென அஸ்வின் அண்மையில் ஓய்வு முடிவை அறிவித்தார். இதனை விமர்சித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, “பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் 5 போட்டிகளின் முடிவிலாவது அஸ்வின் ஓய்வை அறிவிக்க பயிற்சியாளர் கம்பீரோ, கேப்டன் ரோகித் சர்மாவோ அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை” என்று விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் தனது மகன் அவமானப்படுத்தப்பட்டதாகவும், எவ்வளவு காலம்தான் அவர் சகித்துக்கொள்வார் என்றும் அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், “அஸ்வின் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் ஓய்வை அறிவித்து விட்டார். அதனை முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரது அறிவிப்பு ஒரு வகையில் மகிழ்ச்சி அளித்தாலும் இன்னொரு வகையில் அவர் தொடர்ந்து விளையாடலாம் என்று கருதுகிறேன்.
அஸ்வினின் முடிவில் நான் தலையிட முடியாது. ஆனால் அவர் ஓய்வை அறிவித்ததற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று அஸ்வினுக்கு மட்டும்தான் தெரியும். அவமானம் கூட அவர் ஓய்வை அறிவித்ததற்கு காரணமாக இருக்கலாம்.” என்று தெரிவித்தார்.
மகனின் ஓய்வு பற்றி அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த இந்தப் பேட்டியை பிரபல அரசியல் விமர்சகரும், விளையாட்டு ஆர்வலருமான சுமந்த் சி ராமன் எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டினார்.
இதற்கு அதே தளத்தில் பதில் அளித்துள்ள அஸ்வின், தனது தந்தைக்கு ஊடகத்தினரிடம் எப்படி பதில் அளிப்பது என்பது குறித்து பயிற்சி இல்லை என்றும், “டேய் ஃபாதர் என்னடா இதெல்லாம்” என நகைச்சுவையாக கவுண்டமணி பாணியில் குறிப்பிட்டுள்ள அஸ்வின், “சில கிரிக்கெட் வீரர்களின் அப்பாக்கள் பேசுவதைப் போல, நீங்களும் பேசுவீர்கள் எதிர்பார்க்கவில்லை” என யுவராஜ் சிங்கின் தந்தையை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தையின் பேச்சை மன்னித்து, அவரை விட்டுவிடுங்கள் என்று மட்டுமே அஸ்வின் பதிவிட்டுள்ளார், எனினும் தாம் அவமானப்படுத்தப்பட்டேனா இல்லையா என்று எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.