ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த சட்டசபை தேர்தலில் யார் வெற்றி வாகை சூடுவார் என்ற பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய எக்ஸிட் போலின் முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சி சராசரியாக 45 இடங்களுக்கு மேல் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிகிறது.
சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக நவம்பர் 7, நவம்பர் 17 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியை பிடித்தது. அந்த வகையில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க பாஜகவும் போராடி வருகிறது.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் சத்தீஸ்கரில் தேர்ல் நடைபெற்று வருகிறது. முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த ஆட்சி 2003 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து நடந்த தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. 2008, 2013 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ந்து பாஜக ஆட்சியை பிடித்தது.
சுமார் 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தது. இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. பாஜகவை போல் இந்த ஆண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி போராடுகிறது. ஆனால் கடந்த முறை விட்டதை இந்த முறை பிடிக்க வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதற்காக செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பின் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் படி கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் ஓரிரு தொகுதிகளில் வித்தியாசம் இருக்கும் என்ற போதிலும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிகிறது.
கருத்து கணிப்புகள் கருத்து திணிப்புகள் என தங்களுக்கு எதிராக வரும் கணிப்புகளை அரசியல் கட்சிகள் இருந்தாலும் விமர்சித்தாலும் பெரும்பாலும் இந்த எக்ஸிட் போல் முடிவுகள் பொய்த்து போனது இல்லை. அந்த வகையில் சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கும் என கூறியுள்ளது.
அந்த வகையில் டைம்ஸ் நவ் ஈடிஜி காங்கிரஸ் கட்சி 48 முதல் 56 இடங்களில் வெல்லும் என்றும் பாஜக 32 முதல் 40 இடங்களில் வெல்லும் என்றும் கணித்துள்ளது. அது போல் இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்து கணிப்பின் படி 40 முதல் 50 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என்றும் பாஜகவோ 36 முதல் 46 இடங்கள் வரை வெல்லும் என்றும் கணித்துள்ளது.
ஏபிபி சி வோட்டர் கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 41 முதல் 53 இடங்கள் வரையும் பாஜக 36 முதல் 48 இடங்கள் வரையும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா டிவி சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பின் படி 46 முதல் 56 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 30 முதல் 40 இடங்களில் பாஜகவும் வெல்லும் என கணித்துள்ளது. ரிபப்ளிக் டிவி மேட்ரீஸ் கணிப்பின்படி காங்கிரஸ் 44 முதல் 52 இடங்களிலும் பாஜக 34 முதல் 42 இடங்கள் வரை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 24 டுடேஸ் சாணக்யாகணிப்பின் படி காங்கிரஸ் கட்சி 57 இடங்களில் வென்று அருதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்றும் பாஜக 33 இடங்களில் வெல்லும் என்றும் கணித்துள்ளது. டிவி 9 போல்ஸ்ட்ராட் கணிப்பின்படி 40 முதல் 50 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் பாஜக 35 முதல் 45 இடங்களிலும் வெல்லும் என கணித்துள்ளது.
அது போல் ஜன்கீ பாத் கணிப்பில் காங்கிரஸ் 42 முதல் 53 இடங்களிலும் பாஜக 34 முதல் 45 இடங்களிலும் வெல்லும் என கணித்துள்ளது. தைனிக் பாஸ்கர் கருத்து கணிப்பின் 46 முதல் 55 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 35 முதல் 45 இடங்களில் பாஜக வெல்லும், டிவி 5 கருத்து கணிப்புகளின் படி 54 முதல் 66 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 29 முதல் 39 இடங்களில் பாஜகவும் வெல்லும். ஒட்டுமொத்தமக பார்த்தோமேயானால் காங்கிரஸ் கட்சி 46 முதல் 55 இடங்கள் வரைபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்.