டெல்லி: சந்திரயான் 3 சாதனையை தொடர்ந்து, தற்போது இந்திய விண்வெளி வீரர்களை இஸ்ரோ அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்புகிறது. இதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
Axiom-4 மிஷன்: 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் நிறுவனம் சார்பில் 4 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல இருக்கின்றனர். இதுதான் 'The Axiom-4 Mission' என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் விண்வெளி மையத்திற்கு செல்கிறார்கள். இதற்கான பணிகள், ஆய்வு உள்ளிட்ட விஷயங்களில் 4 நாடுகளின் விண்வெளி ஆய்வு மையத்துடனும் ஒத்துழைப்பு அவசியமாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில்தான் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கையெழுத்திட்டுள்ளார்.
யார் யார் விண்வெளிக்கு செல்கிறார்கள்?: மிஷனின் தளபதியாக அமெரிக்காவின் பெக்கி விட்சன், பைலட்டாக இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, மிஷன் ஸ்பெஷலிஸ்டாக போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸான்ஸ்கி, மற்றொரு மிஷன் ஸ்பெஷலிஸ்டாக ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் விண்வெளிக்கு செல்கின்றனர். இதன் மூலம் இந்தியாவில் சார்பில் விண்வெளிக்கு சென்ற இரண்டாவது வீரராக சுபான்சு சுக்லா அறியப்படுவார். மட்டுமல்லாது சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற முதல் வீரர் என்கிற பெருமையையும் பெறுவார்.
இந்தியாவுக்கு என்ன பலன்?: விண்வெளி துறையில் இந்தியா ஏராளமான சாதனைகளை கடந்த காலங்களில் செய்திருக்கிறது. ஆனால், மனிதர்களையோ, இதர உயிரனங்களையும் இதுவரை இந்தியா சொந்தமாக அனுப்பியதில்லை. ஒரே ஒரு முறை சோவியத் ரஷ்யா ராகேஷ் சர்மா எனும் இந்திய வீரரை விண்வெளிக்கு அனுப்பயிருந்தது. எனவே, எதிர்காலத்தில் சொந்தமாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இந்த 'The Axiom-4 Mission' பயன்படும். ஆகவேதான் இந்தியா இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுகிறது.
ஆய்வுகள்: இந்த பயணத்திற்கு 3 முக்கிய நோக்கங்கள் இருக்கின்றன. முதல் நோக்கம் ஆய்வு. அதாவது ஈர்ப்பு விசை இல்லாத இடங்களில் இயற்பியல் எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்பதை பல்வேறு ஆய்வுகளில் தெரிந்து கொள்வுது. இரண்டாவது, ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் விண்வெளியில் எப்படி வேலை செய்கிறது? என்பதை அறிந்துக்கொள்ளுதல். மூன்றாவது, எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான ஒரு கூட்டாண்மையை இந்த விண்வெளி பயணம் மூலம் உருவாக்குவதாகும்.
எத்தனை நாட்கள் பயணம்?: 14 நாட்கள் வரை சர்வதேச விண்வெளி மையத்தில் 4 வீரர்களும் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான முடிவுகளை பூமியில் உள்ள ஆய்வாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஏற்கெனவே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதேபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. Falcon 9 ராக்கெட்டில் SpaceX இன் க்ரூ டிராகன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்று திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.