பாட்னா: பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. பாஜக ஆதர்வுடன் அவர் மீண்டும் பீகாரில் ஆட்சி அமைக்க உள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்துவிட்டு அதன்பின் பாஜகவை கைகழுவிட்டு ஆர்.ஜே.டி, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தவர்தான் நிதிஷ் குமார். அவர்தான் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக லாலுவின் ஆர்ஜேடி கட்சிக்கும் - நிதிஷ் குமாருக்கும் இடையே உரசல் இருந்தது. அதேபோல் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் பதவி நிதிஷ் குமாருக்கு கொடுக்கப்படவில்லை என்பதும் பெரிய விவாதமாக இருந்தது.
இதுதான் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்ல காரணம் ஆகும். இதனால் இந்தியா கூட்டணி உடையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
கண்டிஷன்: இந்த நிலையில்தான் பாஜக கூட்டணிக்கு திரும்பும் நிதிஷ் குமாருக்கு அமித் ஷா சில கண்டிஷன்களை விதித்து உள்ளாராம். அதன்படி,
லோக்சபா தேர்தலில் குறைவான இடங்களை கொடுப்பது.
சட்டசபையில் பாஜக அமைச்சர்களுக்கு அதிக இடம் கொடுப்பது.
அமைச்சர்களுக்கான இலாக்காக்களை பாஜகவே தேர்வு செய்வது.
துணை முதல்வர் பதவியை பாஜகவிற்கு கொடுப்பது.
லோக்சபா தேர்தலில் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பதை பாஜகவே முடிவு செய்யும்.
உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பாஜக கூட்டணிக்கு திரும்பும் நிதிஷ் குமாருக்கு அமித் ஷா விதித்து உள்ளாராம். , இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தையும் பாஜக மற்றும் ஜேடி(யு) கட்சிகள் இறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் ஆட்சி: இன்று மாலை மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது ஜேடியு கூட்டணி ஆட்சி உள்ளது. ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கிய மகா பந்தன் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.
இந்த கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினால் அவர்களுக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காது. இந்த நிலையில் அவர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பெரும் ஆட்சி: 79 எம்எல்ஏக்களுடன் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. அவர்களை விட ஒரு இடம் குறைவாக அதாவது 78 எம்எல்ஏக்களுடன் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. 45 எம்எல்ஏக்களுடன் நிதிஷ்குமாரின் ஜேடியு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தொடர் கூட்டங்கள்: இந்த நிலையில் பாஜக + ஜேடியு இணைந்து அங்கே ஆட்சி அமைக்க உள்ளது. நிதிஷ் குமாருக்கு சில கட்டுப்பாடுகளுடன் ஆதரவு அளிப்பது தொடர்பாக பாஜக இன்று முடிவு எடுக்க உள்ளது. இதற்காக இன்று காலை 10 மணிக்கு பாஜக சிறப்பு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதை தொடர்ந்து இன்னொரு பக்கம் இன்றி காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் ஜேடியு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கூட்டத்திற்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். , சில ஜேடியு எம்எல்ஏக்கள் ஏற்கனவே பீகார் முதல்வரைச் சந்தித்து பாட்னாவில் தங்கியிருக்கிறார்கள். மாநில தலைநகருக்கு வராத எம்.எல்.ஏ.க்கள் விரைவில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாஜக எம்எல்ஏக்கள் நிதிஷ் குமாரின் இல்லத்துக்கு வந்து முதல்வரிடம் ஆதரவு கடிதம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. NDA கூட்டுக் கூட்டத்திற்குப் பிறகு, NDA சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக நிதிஷ் தேர்வு செய்யப்படுவார் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ராஜினாமா பதவி ஏற்பு: இதையடுத்து பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இன்று மாலை மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) அனைத்து அமைச்சர்களையும் நிதிஷ்குமார் இன்று பதவி நீக்கம் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ஜேடியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களுக்குப் பதிலாக அவர் பாஜக எம்எல்ஏக்களை அமைச்சர்களாக கொண்டு வர வாய்ப்புள்ளது.