சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் சமீபத்தில் திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்து கடுமையாக பேசி இருந்தார். இதற்கு அமைச்சர்கள் பலரும் பதிலடி கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இனிமேல்.. இது போன்ற விவகாரங்களில் அமைச்சர்கள் பதில் தருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆளும் திமுக மீது இரண்டு முக்கியமான விமர்சனங்களை வைத்து இருந்தார்.
முதல் விஷயம்: விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டது; அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும்.
கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு '200 வெல்வோம்' என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு... என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. இருமாப்போடு 200 தொகுதியிலும் வெல்வோம் என்று சொல்பவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள், என்றார்.
இரண்டாவதாக, நான் ஏன் மழை வெள்ளத்திற்கு நேரடியாக சென்று நிவாரணம் வழங்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடறதும், அறிக்கை விடறதும், மழையில் நீரிலிருந்து போட்டோ எடுக்குறதும்... எனக்கு அதுல கொஞ்சம்கூட உடன்பாடில்ல.
மணிப்பூர் விவகாரத்தைக் கண்டே கொள்ளாமல் மத்தியில் ஆட்சியில் செய்துவருகிறார்கள். வேங்கைவயல் விஷயத்தில் இங்கிருக்கும் சமூக நீதி அரசும் ஒன்றும் செய்யவில்லையே... இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்திருந்தால் வெட்கித் தலைகுனிந்திருப்பார். ஜனநாயகத்தின் ஆணி வேரே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்தான். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் சுதந்திரமாகவும், நியாயமாகவும்தான் தேர்தல் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும் என தோன்றுகிறது. தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்துடன் நியமிக்கப்பட வேண்டும் என்பது எனது வலிமையான வேண்டுகோள் என்று விஜய் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் பதிலடி: இதற்கு திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் பதிலடி தந்தனர். உதயநிதி நடித்த படங்களில் கொள்கை இருந்தது விஜயின் படங்களில் கொள்கை இல்லை என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
அதேபோல் சினிமா செய்திகளுக்கு பதில் அளிக்க போவதில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட குறிப்பிட்டு இருந்தார். சேகர் பாபு தொடங்கி பல அமைச்சர்கள் இதற்கு பதிலடி தந்திருந்தனர்.
வேண்டாம்: இந்த நிலையில் இனிமேல்.. இது போன்ற விவகாரங்களில் அமைச்சர்கள் பதில் தருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. புதிதாக கட்சி தொடங்கும் நபர்களை பற்றி எல்லாம் பேச வேண்டாம். அவர்கள் களத்தில் நிரூபிக்கட்டும் அதன்பின் பேசலாம். அதுவும் எந்த விஷயங்களையும் பெரிதுபடுத்த வேண்டாம்.
அதை பற்றி எல்லாம் பேசத்தான்.. ஐடி விங் இருக்கிறது. இதற்கான பதில்களை ஐடி விங் அளிக்கும்.அமைச்சர்கள் இதற்கெல்லாம் பதிலடி தந்து மாண்பை குறைக்க வேண்டாம், என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage