சென்னை: தமிழ்நாட்டின் முக்கியமான துறை ஒன்று டிஜிட்டல் மயமாகி உள்ளது. இதற்கான தொடக்க கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் இந்த மாற்றம் தொடர்பான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது குடிநீர் வரி அளிப்பதற்கு பணிமனை அலுவலகங்களில் தனி அறைகள் செயல்பட்டு வருகின்றன. நமக்கு வர கூடிய குடிநீர் வரி அளவில் பொறுத்து நேரடியாக சென்று இந்த அலுவலகங்களில் கட்டணம் செலுத்த முடியும்.
இந்த நிலையில்தான் பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் அக்.1 முதல் செயல்படாது. முன்பெல்லாம் இங்கே வரிசையில் காத்திருந்து பணம் செலுத்த வேண்டும். இதை தடுக்கும் விதமாக குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கவிக்கவும், வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இங்கே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வகைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
ரேஷன் டிஜிட்டல்: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அமலுக்கு வந்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முன்பே தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
அந்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனி மக்கள் எளிதாக பேடிஎம் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்த முடியும். இதற்காகவே மொபைல் முத்தம்மா திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரேஷனுக்கு வரும் பெண்களுக்கும் மற்றவர்களுக்கும் க்யூ ஆர் கோடு மூலம் பணம் அனுப்ப ஆலோசனை வழங்கப்படும்.
புதிய துறை: தற்போதைய டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிகாரப்பூர்வ மாநில சுற்றுலா செயலியை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டின் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா இடங்களைப் பிடிக்கவும் காட்சிப்படுத்த இந்த செயலியை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மொத்தத்திற்கும் சுற்றுலா கைடு போல இருக்கும் விதமாக இந்த செயலி உருவாக்கப்பட உள்ளது.
சமீபத்தில்தான் இதற்கான கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில், சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்புகளை அளித்தல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சுற்றுலா கொள்கை: உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் குறிப்பிடத்தக்க இயக்கியாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. திறமையான தொழில் வல்லுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள், வழிகாட்டிகள், சிறிய அளவிலான தொழில்முனைவோர் என பரந்த அளவிலான திறன்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனை சுற்றுலாத்துறை கொண்டுள்ளது.
ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டை உயர்த்துவதையும், சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிப்பதையும், அன்னிய செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வலுவான அடித்தளத்தையும், மாறிவரும் காலங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு முன்னேறும் அணுகுமுறையையும் உறுதி செய்யும் வகையில் ஆராய்ச்சி மற்றும் விரிவான ஆய்வின் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை சார்ந்த நிபுணர்கள மூலம் இது உருவாக்கப்பட்டு உள்ளது.
தொழில் அந்தஸ்தை: இதன்மூலம் இதுவரை தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தி, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூர்த்தி செய்கிறது.
முன்னுரிமை சுற்றுலா பிரிவுகள்: சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்டுள்ளது.
நிலைப்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் அளிக்கப்படும என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.