அந்த ஒரு வார்த்தை.. டிரம்ப்பால் சர்வதேச வர்த்தகத்திற்கு ஆபத்து.. இந்தியாவுக்கு சிக்கல் வருமா?

post-img
வாஷிங்டன்: டிரம்ப் எப்போதும் சர்ச்சை கருத்துகளைக் கூறுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். இதற்கிடையே இப்போது அவர் சர்வதேச வர்த்தகத்தையே ஆபத்தில் தள்ளும் வகையிலான ஒரு சச்சை கருத்தைக் கூறியிருக்கிறார். இது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் சர்ச்சை கருத்துகளைக் கூறுவதை வாடிக்கையாகவே வைத்து இருக்கிறார். இதற்கிடையே டிரம்ப் இப்போது பனாமா கால்வாய் குறித்து சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பனாமா கால்வாய் சர்ச்சை: அதாவது பனாமா கால்வாயைப் பயன்படுத்துவதற்கு அதிக கட்டணத்தை பனாமா நாடு வசூலிப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பனாமா கால்வாயை அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பனாமா நிர்வகிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அதை அமெரிக்காவிடமே ஒப்படைக்குமாறு வலியுறுத்தப் போவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தவறான கைகளில் பனாமா கால்வாய் செல்வதையும் தான் அனுமதிக்க மாட்டேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அந்த பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், அதை மறைமுமாகவ விமர்சிக்கும் வகையிலேயே டிரம்ப் இந்தக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். பனாமா கால்வாய் என்றால் என்ன: பனாமா கால்வாய் என்பது பனாமாவில் அமைந்துள்ள 82 கிமீ நீள நீர்வழி பாதையாகும். இது அட்லாண்டிக் பெருங்கடலைப் பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கிறது. இது பனாமாவின் இஸ்த்மஸ் என்ற பகுதியில் அமைந்துள்ளது. ஆசிய நாடுகளில் இருந்து செல்லும் கப்பல்கள் அமெரிக்காவின் கிழக்கு கரையை எளிதாக அடைய இந்த கால்வாய் உதவுகிறது. இது ஒரு கால்வாயில் மட்டும் உலக வர்த்தகத்தில் சுமார் 5 முதல் 7% சரக்கு செல்கிறது. அந்தளவுக்கு இது முக்கியமான கால்வாயாக இருக்கிறது. இதற்காகக் கடல் மட்டத்திலிருந்து 26 மீட்டர் (85 அடி) உயரத்தில் உள்ள ஒரு செயற்கை நன்னீர் ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. கப்பல் கடக்கும் போது அந்த நீரே பயன்படுத்தப்படும். சூயஸ் கால்வாயை போலவே இந்த ஏரியின் நீர்மட்டம் குறைவது இந்த கால்வாயின் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 19ம் நூற்றாண்டிலேயே பிரான்ஸ் இந்த கால்வாயைக் கட்ட முயன்றது. இருப்பினும், அப்போது முடியவில்லை.. இதையடுத்து கடந்த 1904ம் ஆண்டு அமெரிக்கா இந்த கால்வாயின் கட்டுமானத்தைத் தொடங்கியது. 1914ல் இதன் கட்டுமானம் நிறைவடைந்தது. கடந்த 2007இல் கால்வாய் விரிவாக்க பணிகள் தொடங்கிய நிலையில், 2016இல் அதுவும் முடிந்தது. அமெரிக்கா: 1999ம் ஆண்டு வரை பனாமா கால்வாயை அமெரிக்காவே நிர்வகித்து வந்தது. 1999ல் தான் கால்வாயின் மொத்த உரிமையும் பனாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 25 ஆண்டுகளாக பனாமாவே இந்த கால்வாயை மொத்தமாகக் கவனித்து வரும் சூழலில் தான், டிரம்ப் இந்ந கருத்துகளைக் கூறியுள்ளார். மீண்டும் கால்வாயை நிர்வகிக்கும் பொறுப்பை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் சர்ச்சை: இது தொடர்பாக அவர் தனது ட்ரூக் சோஷியல் பக்கத்தில், "பனாமாவால் விதிக்கப்படும் கட்டணங்கள் அபத்தமானது. குறிப்பாக பனாமாவுக்கு அமெரிக்கா தாராள மனப்பான்மையுடன் உதவும் போதிலும், இந்தளவுக்குக் கட்டணம் விதிப்பது சரியானது இல்லை. மற்றவர்களின் நலனுக்காக ஒன்றும் இதை அமெரிக்கா ஒப்படைக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பதற்கான அடையாளமாக கால்வாய் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தார்மீக மற்றும் சட்ட ரீதியான கொள்கைகள் பின்பற்ற மறுத்து வருகிறார்கள். எனவே, பனாமா கால்வாயை உரிமை கோருவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. கால்வாய் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடுங்கள்" என்பது போலக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் சர்வதேச கப்பல்கள் பனாமா கால்வாயை பாதிக்கிறது. இந்தியக் கப்பல்கள் கூட கணிசமான அளவுக்கு பனாமா கால்வாயை பயன்படுத்துகிறது. அதேநேரம் டிரம்ப் இதுபோல தடாலடி கருத்துகளைச் சொல்வது வாடிக்கை தான் என்றாலும் உடனடியாக இதனால் எந்தவொரு பிரச்சினையும் வராது என்றே சொல்லப்படுகிறது.

Related Post