சென்னை: தாம்பரம் முடிச்சூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பஸ் நிறுத்தம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்தார். இதனால் கோயம்பேட்டிற்கு பேருந்துகள் செல்லுமா என்ற கேள்வி எழுந்ததது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.42.70 கோடி செலவில் முடிச்சூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆம்னி பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது. இதில் ஆம்னி பஸ்களை நிறுத்திக் கொள்ளலாம். பயணிகளை அங்கு வைத்து ஏற்றவோ, இறக்கவோ கூடாது. இந்த நிறுத்தத்தில் ஒரே நேரத்தில் 150 பஸ்களை நிறுத்த முடியும். அதோடு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வசதிக்காக உணவகங்கள், தங்குமிடங்கள், ஒப்பனை அறைகள் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில் ஆம்னி பேருந்து பனிமனை கோயம்பேட்டில் இருந்த காரணத்தால் தான் இத்தனை நாட்களாக பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டன. அதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்தது. இப்போது முடிச்சூரில் பேருந்து ஆம்னி பேருந்து பணிமனை கட்டப்பட்டுள்ளதால், இனி கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகில் முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தும் இடத்தை முதல்-அமைச்சர் 7-ந் தேதி (அதாவது நேற்று முன்தினம்) திறந்து வைத்தார். இந்தப் பஸ் நிறுத்தும் இடத்தில் அதிகபட்சமாக 150 பஸ்கள் வரை நிறுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள அனுமதியின்படி, ஆம்னி பஸ்கள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகளிலும், போரூர் சுங்கச்சாவடி அருகில் இருந்தும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐகோர்ட்டில் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பஸ்கள் கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும்.
மேலும் தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் அந்த பகுதியை சேர்ந்த மற்றும் ஈ.சி.ஆர். (கிழக்கு கடற்கரை சாலை) பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பஸ் நிலையத்தை சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பஸ்களும் பயன்படுத்தி 20 சதவீதத்திற்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து ஏற்றி செல்கிறோம்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அந்த பகுதி பயணிகளுக்கு மிக்க பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் இணைப்பு செய்து முடிக்கும் போது பயணிகளுக்கு அதிக பயன்களை தரும். மேலும், ஈ.சி.ஆர். சாலை வழியாக புதுச்சேரி மற்றும் பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என்பதை தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage