இஸ்கான் கோவிலுக்கு தீவைப்பு.. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் வன்முறை.. பெரும் பதற்றம்

post-img

டாக்கா: வங்கதேசத்தில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல், இந்து மத தலைவர்கள் மீதான அடக்குமுறைகள் அரங்கேறி வரும் நிலையில் தலைநகர் டாக்காவில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு ஒரு கும்பல் தீவைத்து சிலைகளை சேதப்படுத்தி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நல்ல நட்பில் இருந்தார். இதனால் அங்கு இந்துக்களுக்கு எதிரான வன்முறை குறைந்து இருந்தது. ஆனால் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
குறிப்பாக கோவில்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த நவம்பர் 25ம் தேதி வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவரான சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி எனப்படும் சந்தன் குமார் தர் கைது செய்யப்பட்டார். அக்டோபரில் வங்கதேசத்தில் நடந்த பேரணியில் அந்த நாட்டின் தேசியக்கொடி மீது காவி கொடி ஏற்றிய புகாரில் தேசத்துரோக வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு மத்திய அரசு மற்றும் பிற அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து சிறையில் தான் உள்ளார். அவர் விடுவிக்கப்படவில்லை. அதேபோல் சின்மோய் கிருஷ்ண தாஸை சிறைக்கு சென்று பார்க்க திட்டமிட்டு இருந்த இந்து மத தலைவரான ஷியாம் தாஸ் பிரபு என்பவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு துறவிகள் ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் கைது செய்யப்பட்டனர். சின்மோய் கிருஷ்ண தாஸ் ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தான் வங்கதேச தலைநகர் டாக்காவில் துராக் போலீஸ் எல்லைக்குட்பட்ட தோகூர் பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு ஒரு கும்பல் தீவைத்துள்ளது. இன்று அதிகாலையில் கோவிலுக்குள் நுழைந்த கும்பல் தீவைத்து சிலைகளை சேதப்படுத்தி உள்ளது. இதுபற்றி வங்கதேசத்தை சேர்ந்த இஸ்கான் அமைப்பு கூறுகையில், ‛‛இந்த கோவில் என்பது இஸ்கான் பக்தர்களின் குடும்ப கோவிலாகும்'' என்று தெரிவித்துள்ளது. இதுபற்றி வங்கதேச இஸ்கான் அமைப்பின் பொது செயலாளர் சாரு சந்திர தாஸ் பிரமாச்சாரி கூறுகையில், ‛‛கோவிலுக்கு வைக்கப்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோவில் சிலை சேதமடைந்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
கொல்கத்தா இஸ்கான் அமைப்பின் துணை தலைவர் ராதாராம் தாஸ் கூறுகையில், ‛‛நம்ஹட்டாவுக்கு சொந்தமான இஸ்கான் கோவிலுக்கு வங்கதேசத்தில் தீவைக்கப்பட்டுள்ளது. இந்த இஸ்கானின் நம்ஹட்டா சென்டர் வங்கதேசத்தில் முழுவதுமாக எரிக்கப்பட்டுள்ளது. தெய்வங்களான ஸ்ரீஸ்ரீ லட்சுமி நாராயணா மற்றும் அனைத்து பொருட்களும் எரிந்துள்ளது. அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் ஹரே கிருஷ்ணா நம்ஹட்டா சங்கத்துக்கு சொந்தமான கோவிலுக்குள் நுழைந்த கும்பல் ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணா கோவில் மற்றும் ஸ்ரீஸ்ரீ மகாபாக்யா லட்சுமி நாராயணன் கோவில் தீவைத்துள்ளது'' என்று கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வங்கதேசத்தை சேர்ந்த துராக் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவைத்த கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Post