சென்னை பிரஸ் கிளப் தேர்தல்.. இணைச் செயலாளராக ஒன் இந்தியாவின் நெல்சன் சேவியர் வெற்றி!

post-img
சென்னை: சென்னை பிரஸ் கிளப் என அழைக்கப்படும் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் நீதிக்கான கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவர் தவிர அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் 11 பொறுப்புகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் 10 பேர் வெற்றி பெற்றனர். மன்றத்தின் இணைச் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட ஒன் இந்தியா தமிழின் எக்சிக்யூடிவ் ஆசிரியர் நெல்சன் சேவியர் பதிவான 1371 வாக்குகளில் 697 வாக்குகள் பெற்று 236 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 1972ம் ஆண்டு சென்னை பிரஸ் கிளப் உருவாக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் நலனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சென்னை பிரஸ் கிளப்பிற்கு கடைசியாக 1999ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு தேர்தல் நடத்தப்படாத நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவுத்துறை சட்டத்தின் படி தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று காலை வாக்குப்பதிவு நடந்தது. இதன் காரணமாக பிரஸ் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு தேர்தல்: சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகையாளர் மன்றத்தில் தேர்தல் நடத்தாமல் இருந்த நிலையில், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தேர்தல் நடந்தது. சுமார் 1502 வாக்காளர்கள் கொண்ட பத்திரிகையாளர் மன்றத்தில், 1371 பேர் வாக்களித்திருந்தனர். இதில், மூத்த ஊடகவியலாளர் ஆசீப் தலைமையில் நீதிக்கான கூட்டணி போட்டியிட்டது. இந்தக் கூட்டணியில், மூத்த ஊடகவியலாளரும் ஒன் இந்தியா தமிழின் செயலாக்க ஆசிரியருமான நெல்சன் சேவியர் இணைச் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்டார். தி இந்து பத்திரிகையின் ஆசிரியரும் இந்திய அளவில் மூத்த ஊடகவியலாளருமான என்.ராம் அவர்களின் ஆசியோடு வாக்கு சேகரிக்க தொடங்கிய இந்தக் கூட்டணியினருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஆதரவு பெருகியது. நெல்சன் சேவியர் காணொளி: வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன், இந்தப் பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் நீதிக்கான கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என நெல்சன் சேவியர் வெளியிட்ட காணொலி அனைத்து பத்திரிகையாளர் மத்தியிலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே உற்சாகமாக நடந்து வந்த வாக்குப்பதிவில், இளம் பத்திரிகையாளர்கள் பெருவாரியாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்கு இந்த காணொலி ஒரு முக்கிய காரணியாக இருந்ததாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்து, மாலை 6 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், இணைச் செயலாளருக்கான முடிவுகள் முதலில் வெளியானது. அதில், நீதிக்கான கூட்டணி சார்பில் போட்டியிட்ட நெல்சன் சேவியர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாற்று அணியின் முருகேசனைவிட 236 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முடங்கிக்கிடந்த பத்திரிகையாளர் மன்றத்தை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட நீதிக்கான கூட்டணியின் முதல் வெற்றியை பதிவு செய்தார் நெல்சன் சேவியர். இதில், நீதிக்கான கூட்டணி சார்பில் போட்டியிட்ட பத்திரிகையாளர் சுரேஷ் வேதநாயகம் 659 வாக்குக் பெற்று தலைவர் பொறுப்புக்கும், மூத்த ஊடகவியலாளர் ஆசீப் 734 வாக்குகள் பெற்று பொதுச் செயலாளர் பொறுப்புக்கும், மூத்த ஊடகவிலயாளர் மணிகண்டன் 803 வாக்குகள் பெற்று பொருளாளர் பொறுப்புக்கும் தேர்வாகினர். நீதிக்கான கூட்டணி சார்பில் துணைத்தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட மூத்த ஊடகவியலாளர் மதன், மற்றும் சுத்தரபாரதி பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். மன்றத்தின் நிர்வாகக் குழு பொறுப்புக்கு போட்டியிட்டவர்களில் மூத்த ஊடகவிலயாளர் ஸ்டாலின், இளம் பத்திரிகையாளர்கள் அகிலா மற்றும், விஜயகோபால், ஒளிப்பதிவாளர் பழனிவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், மாற்று அணியில் போட்டியிட்ட மூத்த ஊகடவியலாளர் கவாஸ்வர் நிர்வாகக்குழுவுக்கு தேர்வானார். நெல்சன் சேவியர் போஸ்ட்: இந்த தேர்தல் வெற்றி தொடர்பாக நெல்சன் சேவியர் வெளியிட்டுள்ள போஸ்டில், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தை மீட்பதென்பது பத்திரிக்கையாளர்களின் கால் நூற்றாண்டு கனவு. இந்த தேர்தலில் மன்றத்தை மீட்பதையே குறிக்கோளாகக் கொண்ட நீதிக்கான கூட்டணி வரலாற்று வெற்றி பெற்றிருக்கிறது. சேப்பாக்கத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையே நீதி கேட்டு நடையாய் நடந்த Madras Union of Journalist மறைந்த திரு. மோகன் சாருக்கும், அவரோடு அவர் தலைமையேற்று போராடிய பத்திரிக்கையாளர்களுக்கும் இ‌ந்‌‌த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தை மீட்பதென்பது பத்திரிக்கையாளர்களின் கால் நூற்றாண்டு கனவு. இந்த தேர்தலில மன்றத்தை மீட்பதையே குறிக்கோளாகக் கொண்ட நீதிக்கான கூட்டணி வரலாற்று வெற்றி பெற்றிருக்கிறது. சேப்பாக்கத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையே நீதி கேட்டு நடையாய் நடந்த Madras… pic.twitter.com/9Ry39ZpzXh தேர்தலை சிறப்பாக நடத்தி தந்த ஓய்வுபெற்ற நீதியரசர் பாரதிதாசன் அவர்களுக்கும், இந்த தேர்தல் நியாயமாக நடைபெற பெரிதும் உதவிய வழிகாட்டுதல் குழுவைச் சேர்ந்த மூத்தப் பத்திரிக்கையாளர்கள் திரு. இந்து என் ராம், திரு. நக்கீரன் கோபால், திரு. பகவான் சிங், திரு. சாவித்திரி கண்ணன், திரு. குபேந்திரன், திரு. நூருல்லா, திரு. டி.சுரேஷ் குமார், திரு. சிகாமணி, திருமதி. கவிதா முரளிதரன், திருமிகு. லட்சுமி, திரு. சண்முகப் பிரியன், திரு. இரா.முருகேசன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நீதிக்கான கூட்டணிக்கு வாக்களித்து பெரும் வெற்றியைக் கொடுத்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி, என்று கூறி உள்ளார். நீதிக்கான கூட்டணியில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் பத்திரிகையாளர் மன்றத்தில் தேர்தலை நடத்த சுமார் 15 ஆண்டுகாலம் சட்டப்போராட்டம் நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்களது வெற்றியை மெட்ராஸ் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் மூத்த ஊடகவியலாளருமான மறைந்த மோகன் அவர்களுக்கு தங்களது வெற்றியை அர்பணித்தனர்

Related Post