புதுக்கோட்டை: ஈசன் படத்தில் புகழ்பெற்ற பாடலைப் பாடிய நாட்டுப்புறப் பாடகி தற்போது முடக்குவாத நோய் பாதித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
இயக்குநர் சசிகுமாருக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் சுப்பிரமணியபுரம். இதை தமிழ் சினிமாவின் 'கல்ட் மூவி' என்று திரை விமர்சகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து சசிகுமார் இயக்கிய படம்தான் ஈசன். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெற்ற வெற்றியைவிட அதில் இடம்பெற்ற 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து'; என்ற நாட்டுப்புறப் பாடல் தமிழ்நாட்டில் ஒலிக்காத இடங்களே இல்லை. அந்தளவுக்கு அந்தப் பாடலில் இடம்பெற்ற குரல் தமிழக மக்களைக் கவர்ந்து இழுத்தது. அதிலிருந்த மண் மணம் பாடலை பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்டாட வைத்தது.
குறிப்பாக இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் அமைத்துக்கொடுத்த நடனம் தனித்தன்மையோடு இருந்தது. ஆகவே, பாடலும் நடனமும் சேர்ந்து தமிழ்நாட்டைப் போட்டு உலுக்கி எடுத்தது. அந்தப் பாடலை பாடியவர் நாட்டுப்புற பாடகி தஞ்சை செல்வி, பாடல் வெற்றி பெற்ற அளவுக்கு இவர் ஏனோன புகழ்பெறவில்லை.
இந்தப் பாடல் வெற்றியைத் தொடர்ந்து தஞ்சை செல்வி 'அழகர்சாமி குதிரை', 'அம்புலி', 'மத யானைக்கூட்டம்' , 'போராளி' என சில படங்களில் வாய்ப்பை பெற்றார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் கானா பாடல்களின் ஆதிக்கம் அதிகரிக்கவே சொல்லிக் கொள்ளும் படியான படவாய்ப்புகள் செல்விக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, அவர் காலப்போக்கில் சினிமா துறையைவிட்டு வெகுதூரம் போய்விட்டார். மக்களும் அவரை மறந்துபோய்விட்டனர். இந்நிலையில்தான் தஞ்சை செல்வி தற்போது வறுமையில் வாடிவருவதாகவும் கடந்த 4 மாதங்களாக முடக்குவாத நோய் பாதிக்கப்பட்டு மூலையில் நடக்கக்கூட முடியாமல் முடங்கிக் கிடப்பதாகச் சோகமான பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தி மூலம் தெரியவந்துள்ளது.
பல படங்களில் பாடல்களைப் பாடி சினிமா புகழ்பெற்று இருந்தாலும் தஞ்சை செல்வி தற்போது புதுக்கோட்டை மாவட்டம் தர்ஷணாபுரம் கிராமத்தில்தான் ஒரு ஓலைக்குடிசையில்தான் தஞ்சை செல்வி வசித்துவருகிறார். அந்த வீடு நான்குபுறங்களிலும் மண் குடிசையாகவே காட்சி தருக்கிறது. தரைகூட மண் தரைதான். இந்த ஓலைக் குடிசைக்குள் இருந்த இவருக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் ஒரு விசயமாக அவரது குரல்தான் இருந்தது. அதைக் கொண்டு கச்சேரிகளில் பாடி வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்.
தற்போது எழுந்து நிற்கவே முடியாத நிலையில் உள்ள செல்வி பேசினாலே மூச்சு இரைக்கிறது. அவரால் சற்று நேரம் தொடர்ந்து பேசவே முடியவில்லை. அவர் முகமும் உடலும் சக்தியற்று போய் இருக்கிறது. ஆகவே, அரசாங்கம் தனக்கு மருத்துவ உதவியைச் செய்து தரவேண்டும் என்கிறார். முதல்வர் ஸ்டாலினின் தன் உடல்நிலையைக் காப்பாற்றி தரவேண்டும் எனக் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைக்கிறார்.
அவரது கணவரும் தங்களின் வறுமையால் முறையான மருத்துவ வசதி செய்து கொள்ள முடியவில்லை என்கிறார். ஆகவே, அரசின் கவனம் தங்களின் பக்கம் திரும்ப வேண்டும் என்கிறார். செல்வியும் அவரது கணவரும் படித்தவர்கள் இல்லை. ஏதோ நாட்டுப்புறப் பாடல் அவர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.
தனது நிலையைப் பற்றி கவலையோடு பேசியுள்ள செல்வி, "மறுபடியும் மக்கள் மத்தியில் தான் பாட வேண்டும். அதுவே தன் வாழ்நாள் விருப்பம்" என்று சொல்கிறார். ஒரு காலத்தில் பட்டி தொட்டி முழுக்க சந்தோஷமாக ஒலித்த இந்தக் குரல் இன்று சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
அவருக்கு உரிய மருத்துவச் சிகிச்சையைச் செய்து தர சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்வருவாரா? முதல்வர் ஸ்டாலினின் கவனம் இவர் மீது விழுமா? அவர் மீண்டும் எழுந்து நடப்பாரா? பழைய நிலைக்குத் திரும்புவாரா? என ஆயிரம் கேள்விகள் நெஞ்சை அழுத்துகின்றன. அவருக்கு அரசு உடனடியாக உதவ வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் முன்வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது.
'ஜில்லாவிட்டு ஜில்லா வந்து' பாடலில் இறுதி வரிகள் "நான் எல்லாத்தையும் விக்கிறேன்...இப்ப இங்கே நிக்கிறேன்...என் கதைய முடிக்கிறேன்..." என்று வரும். அந்தப் பாடகியின் சோக கதை அதேபோல்தான் தற்போதைக்கு உள்ளது. அரசு உதவியை அவர் எதிர்பார்த்தாலும் இயக்குநர் சசிகுமார் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அவரைக் காப்பாற்ற உதவிக்கரம் நீட்ட வேண்டும். அதைச் செய்வார்களா?