சென்னை: காலநிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே உலகளவில் ஏராளமான இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் 2025 புத்தாண்டில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக இருக்கும் என ஜோதிடர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், ஜோதிடருமான அனுமோகன் சித்தர் ஏட்டின் அடிப்படையில் பேசுவதாக சில பீதியூட்டும் தகவல்களை கூறியுள்ளனர்.
இதுகுறித்து அனுமோகன் கூறுகையில், "ஒரு தலைமுறைக்கு 23 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. அதன்படி 2000 ஆம் ஆண்டில் இருந்து 2023 வரை ஒரு தலைமுறை முடிந்துவிட்டது. அடுத்தத் தலைமுறை தொடங்குவதற்கு முன்பு உலகளவில் மாபெரும் அழிவு ஏற்படும் என்று தலை சித்தர் ஏடு கூறுகிறது. பஞ்ச பூதங்கள் ஒன்றிணைந்து செயல்படப் போகிறது. டிசம்பரில் பேரழிவு காத்திருக்கிறது.
நீர் நிலமாக மாறும், நிலம் நீராக மாறும். எரிமலை வெடிக்கும். வானில் இருந்து எரி நட்சத்திரம் பூமியில் விழும். புயல் அடிக்கும். மனிதர்கள் எண்ணங்கள் ஒழுக்கமில்லாமல் மிருகத்தனமாக மாறுவதால் இயற்கை தன் வேலையை காட்டுகிறது. இது இயற்கையின் விளையாட்டு. சித்தர் ஏட்டில் சொல்வது இதுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை நான் 40 ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்கிறேன். அது இப்போது நினைவுக்கு வருகிறது.
கடவுள் சொல்வதை, நான் வெளி உலகுக்கு சொல்கிறேன். இவை எல்லாம் நடக்க கூடாது என்பதுதான் எனது எண்ணமும். இருப்பினும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன். அறிவியல் தொழில்நுட்பத்தில் நாம் பெரியளவுக்கு வளர்ந்தாலும் இயற்கை சீற்றத்துக்கு முன்பு நாம் எதுவுமே கிடையாது. இயற்கை சீறினால் மனிதர்களால் எதுவும் செய்ய முடியாது.
தூத்துக்குடி தொடங்கி கலிபோர்னியா வரை அதன் பாதிப்புகள் தான். இவையெல்லாம் வரக்கூடிய அழிவின் ஆரம்பம். கடலுக்குடியில் பூமியின் பிளவு தான் சுனாமி. அதில் தண்ணீர் பொங்கி அலை அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா என்று மூன்ற கடல்கள் ஒன்றிணையும் இடத்தில் நாம் இருக்கிறோம். மூன்றும் ஒன்றாக பிரளயம் செய்தால் நம்மால் என்ன செய்ய முடியும்.
அதனால் தான் இது நடக்கும்போது ராவண பூமி கடலுக்குள் மூழ்கும் என சித்தர் ஏட்டில் தெளிவாக கூறியுள்ளனர். இலங்கை எவ்வளவு பெரிய தீவு. அதனால் தெற்கு பகுதியில் பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. 100 மீட்டர் உயரத்துக்கு அலை வருவதற்கு வாய்ப்புள்ளது என்கின்றனர். பேரழிவு ஏற்படும்போதுதான் புதிய தீவுகள் உருவாகும். தேனாம்பேட்டை சிக்னல் அருகே ஆலையம்மன் கோயில் உள்ளது. முன்பு அதற்கு அலையம்மன் என்றுதான் பெயர். கரையில் தான் அந்த கோயில் இருந்துள்ளது. அதுவரை அலை வரும் என்பார்கள்.
மீனவர்களால் கட்டப்பட்ட கோயில் அது. அதனால் தான் அலையம்மன் என பெயரிட்டுள்ளனர். அது மறுவி ஆலையம்மன் என்றாகியுள்ளது. கேரளாவில் பூமி பொங்கி சாதாரண நிலம் கடலானது. தமிழகத்தில் கடல் உள் வாங்கியது. மீண்டும் அலையம்மன் கோயில் முன்பு கடல் வரும் என்று சித்தர் ஏட்டில் சொல்லியுள்ளனர். இயற்கையால் தான் மக்களின் போக்கு மாறும். நாம் இயற்கையின் அடிமை.
இயற்கை சீற்றங்களால் நோய் உருவாகும். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோய்கள் வரும். இந்தியாவின் ஜாதகப்படி அரசியல், கலைத்துறை, அறிவியல் உள்ளிட்ட விவிஐபிகளின் இழப்பு அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் அடுத்து முதல்வராக பதவியேற்பவர் குறைவான காலம் தான் பதவியில் இருப்பார். தமிழ்நாடு அரசியலில் மாற்றம் இருப்பது நிச்சயம்." என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage