காமராஜரை அசிங்கப்படுத்துறாங்க.. “அண்ணாமலைக்காக மாறுவேஷம்”: பாஜக மீது காங்கிரஸ் கட்சி

post-img

திருப்பூர்: காமராஜர் வேடம் அணிந்து பிரச்சாரம் செய்து, அவரது புகழைக் கெடுப்பதாக, பாஜகவினர் மீது பல்லடம் காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரை குறித்து பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்யும் வகையில் கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று துண்டறிக்கைகளை பல்லடம் நகர பாஜகவினர் வழங்கி வருகின்றனர்.


காமராஜர், எம்.ஜி.ஆர், பிரதமர் மோடி, ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோரின் வேடமணிந்து பாஜகவினர் பிரசாரம் மேற்கொண்டு, நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். காமராஜர் வேடமணிந்து, பாஜக நோட்டீஸ் வழங்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


வாழ்ந்து மறையும் வரை காமராஜர் காங்கிரஸ்காரராகவும் மதச்சார்பற்றவராக இருந்ததாகவும், காமராஜரின் புகழைக் கெடுக்கும் வகையிலும் பாஜகவினர் அவரது பெயரை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி, பாஜகவிர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல்லடம் நகர காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


மேலும் தங்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்று நடக்கவிருக்கும் பாஜகவின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரைக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல்லடம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான காமராஜரை, பாஜகவினர் சொந்தம் கொண்டாடி வருவது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது. இப்போது, காமராஜர் போல வேடமணிந்தவரை, பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வைத்துள்ளதால், காங்கிரஸ் கட்சியினர் வெகுண்டு எழுந்துள்ளனர்.

 

Related Post