சென்னை: சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் ரகுபதி இல்லத்திற்கு சென்ற மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை குறித்து அரைமணி நேரத்துக்கு மேலாக பேசியிருக்கிறார்.
20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். ஆதிநாதன் ஆணைய பரிந்துரைகள் மற்றும் சட்ட வழிமுறைகள் குறித்தும் விவாதித்தார்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனது கோரிக்கையை மனிதாபிமானத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார். அவருக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, இது குறித்து கவனத்தில் கொண்டிருப்பதாகவும், சட்டப்பூர்வ நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.
முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி சென்னையில் மஜக சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அதேபோல் கோவை, மதுரை, நெல்லை, கடலூரில் சிறை நிரப்பும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
தற்போது இதே கோரிக்கையை முன்னிறுத்தி செப்டம்பர் 27 அன்று சேலம் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் என்பதால் ஆயுள் சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படுவார்கள். இதனால் நேரம் பார்த்து அமைச்சர் ரகுபதியை சந்தித்து கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.